Freitag, 23. Mai 2008

வேர்களைத் தேடி...

வேர்களைத் தேடி...


நம் பழந்தமிழ் இலக்கியங்களாம் கலிங்கத்துப்பரணி, நந்திக் கலம்பகம், புறநானூறு, குறுந்தொகை .. .. .. இவற்றில் காணப்படும் கவிநயம் படிக்கப் படிக்கத் தெவிட்டாத தேனாய் இனிக்கிறதோ இல்லையோ பலநூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இவ்வினிய கவிவரிகள் இன்றும் எவ்வாறு எம் வாழ்க்கை முறையுடன் ஒத்துப்போகின்றன என்பதுவும் வியப்பைத் தருகின்றது.

இதில் நான் படித்தது பொருளுணர்ந்து வியந்து நின்றது சொற்பமே ஆயினும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்ததில் எழுதுவதே இந்த வேர்களைத் தேடி.

பரணி உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்தபெயரென நினைக்கிறேன். இப்படிச் சொன்னவுடன் இது எங்களது களத்தில் எழுதுகிற கரவை பரணி பற்றிய விசயமாக்கும் என எண்ணவேண்டாம். நான் கூற வருவது கலிங்கத்துப் பரணி எனும் பழந்தமிழ் நூல் பற்றிய சிறுவிளக்கமாகும்.

போர்க்களத்தில் நின்று களமாடி ஆயிரம் யானைகளுக்குமேல் கொன்று குவித்து வெற்றிபெறும் மாவீரனைப் புகழ்ந்து பாடுவதே பரணியாகும். தமிழிலுள்ள 96 வகைப் பிரபந்தங்களில் இதுவும் ஒன்று. இன்று களத்தில் நின்று போராட யானைப்படையும், குதிரைப்படையும், தேர்ப்படையும், நாகாஸ்திரங்களும் இல்லாவிட்டாலும்கூட, தேர்களை ஒத்த டாங்கிப்படைகளும், இலக்கைத் தேடிச்சென்று அழிக்கும் நாகாஸ்திரங்களை நம் மனக்கண் முன் கொண்டு நிறுத்தும் ஏவுகணைகளும் நிறைந்த இன்றைய பொருது களத்தில் பல ஆயிரம் பகை ஒழித்தும், டாங்கிகள் பல சிதறடித்தும், எரிகுண்டுகள் பல உமிழ்ந்த இயந்திரக் கழுகுகள் சிறகு ஒடித்து வானம் நம் வசப்படுத்தியும் வெற்றிமேல் வெற்றிகள் படைத்து இமயமாய் உயர்ந்து நிற்கும் நம் தலைவன். அவன் விழியசைப்பில் எதிரியில் இடியாய் இறங்கக் காத்திருக்கும் பல ஆயிரம் புலிவீரர். நவீன பரணிகள் பல பாட வேண்டிய இவர்தம் வீரம். இன்றைய இந்த யதார்த்தத்தில் கலிங்கத்துப் பரணியை நோக்கி ஒரு சிறு கடைக்கண் பார்வையேனும் செலுத்துவது சாலச் சிறந்ததாகும்.

களம்பல கண்டு வெற்றிகள் குவித்த நந்திவர்மனுக்கோர் தெள்ளாற்றுப் போர்போல...
வீரத்தாலும் விவேகத்தாலும் போர்பல வென்று பரந்த தன் சாம்ராஜ்ஜியமெங்கும் புலிக்கொடி பறக்கவிட்ட முதற்குலோத்துங்கனுக்கு ஒரு கலிங்கத்துப் போர் போல....

நூற்றாண்டுகளாய் தமிழனுக்கோர் தலைகுனிவாய் அந்நியன் வசப்பட்டிருந்த ஆனையிறவுக்கான போரும் காலத்தால் அழியாது என்றும் நம் தலைவன் வீரம் சொல்லும். நந்திக்கலம்பகமும், கலிங்கத்துப் பரணியும் போல நம் கவி புதுவை இரத்தினதுரையும், உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தனும், அம்புலியும் தரும் கவிகளும் ஈழத்துப் பரணியாய் இப்புவி உள்ளவரை நிலைத்திருக்கும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே நம் கனவும்.
இனி..
அழகிய மணலாற்றுப் பகுதியின் பசுமைகள் நிறைந்த வனப்புமிக்கதொரு சிறிய கிராமம். வளங்கள் பல இருந்தும் போரின் அனர்த்தங்களால் ஏழ்மையில் வாடும் சூதுவாதற்ற அம்மண்ணின் மைந்தர்கள்.
குருவிக்கும் தன் கூடென்பதுபோல நேர்த்தியாய் வேயப்பட்டு அழகுறச் சாணியால் மெழுகப்பட்ட சிறுகுடில். அழகிய தன் மனைவிக்கும், வாழ்வின் சோகங்கள் எதுவும் புரியாது சிட்டாய் சிறகடித்துத் திரியும் தன் சின்னஞ்சிறு வாரிசுகள் இரண்டுக்குமாய் தோட்டம் துரவு என ஓடியோடி உழைக்கும் அதன் தலைவன். அன்பிலும் காதலிலும் கட்டுண்ட அச்சிறு கூட்டின் தலைவனுக்கு அன்றொருநாள் ஓர் சேதி வந்தது. எம்மண் பறிக்க வருகிறது நம் பகை. எல்லைப்படை வீரனாய் புகுக களம். மறத்தமிழன் பண்டாரவன்னியன் வழித்தோன்றல் அல்லவா? என்னதான் கஸ்டங்களும் சோகங்களும் வந்தாலும் அவன் வீரம் சோடைபோகுமா என்ன? புறப்பட்டான் குடும்பத்தின் தலைவன் களம் நோக்கி...

பிழைநினைந்து உருகி அணைவுறா மகிழ்நர்
பிரிதலல் அஞ்சிவிடு கண்கள்நீர்
மழைததும்ப விரல் தரையில் எழுதும்
மடநலீர் கடைகள் திறமினோ.

உங்கள் கணவர் உங்களைவிட்டுப் பிரிந்து நாட்டுக்காய் அவர் மேற்கொண்ட கடமையில் செல்ல முனையும்போது உங்களால் அவரைத் தடை செய்யவும் முடியாமல் இனிதாக வழியனுப்பி வைக்கவும் முடியாமல் மௌனமாய் கண்ணீர் வடித்தும், கால்களால் தரையில் கீறியும் நின்ற பெண்ணே உன் கணவன் பகை வென்று வருகிறான் உங்கள் வீட்டின் கதவுகளைத் திறவுங்கள் என்பதாய் அமையும் இப்பாடல் வரிகள், இச்சிறு குடிலின் தலைவியை நோக்கிப் பாடுவதாய் கன கச்சிதமாய் இன்றும் நம் கள நிலைக்குப் பொருந்தவில்லையா என்ன?

வேர்களைத் தேடி............

புறநானூறு என்று சொன்னால் எம்மில் எத்தனை பேருக்கு அதன் விபரம் தெரியுமோ என்னவோ? ஆனால்...

சில நாட்களின் முன் நடந்தபோரில் தந்தையை இழந்த பெண், முதல் நாள் நடந்த போரில் தன் கணவனை இழந்தும் கூட கலங்காது, அடுத்த நாளும் போர்ப்பறை கேட்டதும் தன் வீட்டிலிருந்து இன்றும் போர்முனைக்கு ஒருவரை அனுப்ப வேண்டும் என்று எண்ணி, பச்சிளம் பாலகனான தன் ஒரே மகன் கையில் வீர வாளைக் கொடுத்து "வென்று வா மகனே!" என்று போருக்கு அனுப்பிய வீரம் சொல்லும் புறநானூற்றுக் கதை நன்கு தெரியும்.
புறநானூறானது நாமெல்லாம் எண்ணுவதுபோல வீரத்தை மட்டுமன்றி மன்னர் தம் ஈகைச் சிறப்பையும், தமிழர் நம் வாழ்வியலையும், வாழ்த்தியலையும், புலவர்தம் கையறு நிலையையும் எனப் பல பரிணாமங்களையும் தொட்டு நிற்கும் நானூறு பாடல்களின் கதம்பத் தொகுப்பாகும். இந்தப்பாடல்கள் பல்வேறு காலகட்டங்களில் ஒளவையார், கபிலர், கோவூர்கிழார், பெருந்தலைச்சாத்தனார், போன்ற நாம் சற்றே கேள்விப்பட்ட புலவர்களினாலும், சற்றும் அறியப்படாத வேறும் பலநூறு புலவர்களினாலும் பாடப்பட்டுள்ளன. அதியமான் முதல் கோப்பெருஞ்சோளன், சேரன் இரும்பொறை.............. எனப் புகழ்ந்து பாடப்பட்ட மன்னரின் பெயர்ப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இது தவிரப் பல புறநானூற்றுப் பாடல்களைப் பாடியவர்கள் பற்றிய விபரங்கள் அறியப்படாமலும் பல பாடல்களின் வரிகள் பல கிடைக்கப் பெறாமலும் உள்ளன.

ஒளவ்வை பாட்டி நெடுநாள் வாழ மன்னன் அதியமான் நெடுமான் நெல்லிக்கனி கொடுத்த கதைதான் எமக்கெல்லாம் பரிச்சயமான கதை, ஆனால் ஒளவ்வைக்கு அதியமான் கள்ளுண்ண கொடுத்ததுவும் அதை உண்ட மயக்கத்தில் பாடல் ஆக்க அதியமான் அந்தப் பாடல்களை இரசித்ததாக ஒளவ்வையே கவி வடித்திருப்பதும் நமக்கெல்லாம் புதிய சேதி அல்லவோ?

சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே..............

என்று தொடங்கும் புறநானூற்று பாடல் வரிகளைச் சற்றே பாருங்கள்.

சிறிது மதுவைப் பெற்றால் அதை எங்களுக்கே தருவான். பெரிய அளவில் மது கிடைத்தாலோ அதை நாங்கள் அருந்திப் பாட எஞ்சியதை உண்பான் அதியமான் எனப் பொருள் தரும் இப் பாடல் வரிகள். மது அருந்தும் பண்பால் ஒளவ்வையார் நாமெல்லாம் எண்ணுவது போலப் பெண் புலவரல்ல ஆண் கவியோ என்ற ஐயத்தைத் தருகிறதே. அன்றி நாம் அறிந்தது போல ஒளவ்வை பெண் கவியே ஆயின் அன்றைய நாளில் பெண்கள் மது அருந்தும் கலாச்சாரம் எமக்கு இருந்ததோ என்ற அடுத்த கேள்வியைத் தோற்றுவிக்கிறதே! இந்த ஊகமும் தவறாயின் ஒளவ்வை என்ற பெயரில் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு புலவர்கள் வாழ்ந்தார்களோ என்ற மற்றுமொரு கேள்வி எழுகிறதே.

இவ்வாறு சர்ச்சைகள் பலவற்றையும், அன்றைய நம் கலாச்சார விழுமியங்களையும் கூறி நிற்கும் புறநானூற்றின் மற்றொரு பாடல். எந்தப் புலவாரால் எந்தச் சந்தர்ப்பத்தில் பாடப்பட்டது என்பது கூட அறியப்படாமலும் பாடலின் சில வரிகள் கிடைக்கப்பெறாமலும் உள்ள இப்பாடலின் வரிகள் கூறும் சேதியைச் சற்றே நோக்கினால் ..........

பகைவர்களால் வீசப்பட்ட வேலொன்று நெஞ்சிலே பாயவும், அவன் இவ்வுலகில் பிறந்த கடனை தன் நாட்டிற்காகவே வாழ்ந்து தீர்த்துக் கொண்டான். அவன் எங்கே உள்ளான் என்று கேட்டால்......................... எதிரிகள் பலரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவனோ அவர்களை வீரமுடன் உக்கிரமாய் எதிர்த்து விரட்டிச் சென்றான். அவன் மார்பில் வில்லும் வேலும் பாய்ந்தன. அவன் உடல் அழிய ஆரம்பித்துவிட்டது. அவன் கேடயம் சிதைவுபட்டுச் சிதறிக் கிடைப்பதைக் கண்டோம். அவன் புலவர்கள் பாடுகின்ற சிறப்பைப் பெற்றுவிட்டான். எல்லாத் திசைகளிலும் தன் புகழ் பரவச் செய்துவிட்டான். அவன் அமரனாகிவிட்டான். என்ற பொருள்படும் அப்பாடல்

எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை
யாண்டுள னோவென வினவுதி ஆயின்
.......................(இடை வரிகள் கிடைக்கப் பெறவில்லை.)
வருபடை தாங்கிய கிளர்தார் அகலம்
அருங்கடன் இறுமார் வயவர் எறிய
உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே
மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
.......................(இடை வரிகள் கிடைக்கப் பெறவில்லை.)
அலகை போகிச் சிதைந்துவேறு ஆகிய
பலகை அல்லது களத்துஒழி யாதே
சேண்விளங்கு நல்லிசை நிறீஇ
நாநவில் புலவர்வாய் உளானே.

ஈழத்தின் எல்லைகளிலுள்ள ஏதோ ஒரு பொருது களத்தில் எதிரிகளுடன் கடுமையாகச் சமர் செய்து பல எதிரிகள் கதை முடித்து முன்னேறுகிறான் புலி வீரன் ஒருவன். எதிர்பாராத விதமாக கூட்டமாக சூழ்ந்து கொண்ட எதிரிகள் செலுத்திய தோட்டாக்களை மார்பில் தாங்கி வீரமரணமடையும் முகம் தெரியா அப்போராளி மாவீரனான சேதி எம்மனதை வாட்டுவதில்லையா? அவன் வீரத்தை நம் தமிழ்க் கவிகள் புகழ்ந்து பாடுவதும், மண்ணுக்கு வித்தான அந்த மாவீரனை மாவிரர் துயிலகத்தில் மட்டுமன்றி நம் மனதிலும் வைத்துப் பூசிக்கும் இன்றைய எம் பண்பின் ஆணி வேராக இப்பாடல் தென்படவில்லையா என்ன?

என்ன நேயர்களே வேர்களைத் தேடி அகழ்ந்ததில் உடலெங்கும் சேற்றையும் மண்ணையும் பூசிக்கொண்ட சலிப்பு உண்டாகிறதா? அல்லது தேடுதல் இல்லையென்றால் வாழ்க்கையில் சுவாரசியம் இல்லை என்பது சரிதானா? அப்படியாயின் தொடர்ந்தும் வேர்களைத் தேடுவோம். எங்கள் சமுதாய விழுமியங்களின் வேர்கள் மட்டுமன்றி புதையல்களும் கிடைக்கலாம்.

வேர்களைத் தேடி............

ஈழத்துப் பரணியாய் இப்புவி உள்ளவரை நிலைத்திருக்கும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே நம் கனவும். இனி..
அன்றொருநாள் வேர்களைத் தேட ஆரம்பித்தபோது சொன்ன அந்த எல்லைப்படை வீரனது கதை ஞபகமிருக்கும் என நினைக்கிறேன்.

களமாடச் சென்ற அந்த குடும்பத் தலைவன் எதிரிகளை புறமுதுகிட்டுப் பழைய நிலைகளுக்கே விரட்டியடித்த வெற்றிக் களிப்புடனும், தன் இல்லாளும் சிறிய வாரிசுகள் இரண்டும் எவ்வாறு உள்ளனரோ? என்ற ஏக்கத்துடனும் வீடு நோக்கி நடக்கின்றான். மிகவும் கடினமான சூழ்சிலைகளில் நின்று ஊன் உறக்கமின்றி போரிட்ட களைப்பை அவன் தளர்ந்த நடை சொல்லாமல் சொல்கிறது.

தலைவாசலில் தந்தையைக் கண்டு அப்பா என ஓடிவரும் தனையனை அள்ளி முத்தமிடுகிறான் தலைவன். அந்த இனிய கணத்தையும் தாண்டி அவன் மனதில் என்றுதான் இந்தப் போர்ச் சூழல் தணிந்து சுதந்திரக்காற்று வீசுமோ என்ற ஏக்கமும், பிரிவின் சலிப்பும் ஒருங்கே தோன்ற அவனையும் மீறி நீண்டதொரு பெரு மூச்சு வருகிறது.

தலைவன் வரவால் பூரிப்பு அடைந்த தலைவியின் மனமோ அவனது உள்ளக் குமுறலை உணர்ந்து மறுபுறம் தவித்துப்போனது.

மகனை அள்ளி முகரும் கணவன் அருகே சென்று, அந்த மௌனமான வேளையில் மெதுவாக பின்புறாய் அவனைத் தழுவி தன் ஸ்பரிசத்தால் தலைவனது மனதின் காயங்களுக்கு ஒத்தடமிடுகிறாள் தலைவி. இந்தக் காட்சியை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.

"கண்டிசின் பாண பண்புஉடைத்து அம்ம
மாலை விரிந்த பசுவெண் நிலவின்
குறுந்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப்
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇப்
புதல்வன் தழீஇயினன் விறலவன்
புதல்வன் தாய் அவன் புறம்கவைஇ யினனே."

அந்தி வந்த நேரமதில் நன்கு பரந்த இனிய நிலவின் ஒளியில் குறுகிய கால்களைக் கொண்ட கட்டிலில் நறுமணம் வீசும் மலர்களைப் பரப்பி அதில் பள்ளி கொள்ளும் யானையின் பெருமூச்சை போன்றதொரு பெருமூச்சை விட்டவாறு வெற்றி மிகு தலைவன் தன் புதல்வனை தழுவி மகிழ்ந்தான். இதனைக் கண்ட தலைவியோ பின்புறாய் தலைவனின் முதுகைத் தழுவி நின்றாள். இது நல்ல பண்புடைய செயலாகும் என்பதாக அமையும் இந்தக குறுந்தொகைப் பாடல் இன்றைய நம் தலைவனுக்கும் தலைவியுக்குமாய் எழுதப்பட்டதாய் அமைந்த மாயம் கண்டீரோ?

வேர்களைத் தேடி............

இனி, குறுந்தொகையின்பால் சற்றே பார்வையை திருப்பினால் இதுவும் நம் முன்னோரின் காதல் நயத்தையும், வீரத்தையும், குறிஞ்சி, மருதம், நெய்தல, பாலை என நால்வகை நிலங்களின் நயம்படு வாழ்க்கை முறைகளையும் நமக்கெல்லாம் பறைசாற்றி நிற்கும் இனிய கவிநயம்மிக்க 401 பாடல்களின் தொகுப்பாகும்.

இப்பாடல்களையும் கோவூர்கிழார், ஒளவையார், பரணர், நக்கீரன், கபிலர், சீதலைச்சாத்தனார் போன்ற புலவர்களுடன் வேறு பல புலவர்களும் பாடியுள்ளார்கள். இங்கு சீதலைச்சாத்தனார் பற்றிய குறிப்பொன்று ஞாபகத்துக்கு வந்தது........ அவர் தான் பாடும் கவிகளில் தவறு ஏற்படும்போதெல்லாம் தன் தலையில் எழுத்தாணியால் குத்தி கொள்வாராம். இதனால் சாத்தனாருடைய தலையில் எப்பொழுதும் சீழ்படிந்த புண்கள் காணப்படுமாம். இது சீழ் தலை சாத்தனார் என்ற அடைமொழியை தந்து காலப்போக்கில் அதுவும் மருவி சீதலைச்சாத்தனார் ஆனாராம். இத்துடன் சிறைக்குடி ஆந்தையார், குப்பைக்கோழியார், வெள்ளி வீதியார் என வேடிக்கையான பெயர்களைக் கொண்ட புலவர் பலரும் குறுந்தொகைப் பாடல்களை பாடியுள்ளனர். புலவர் பட்டியலிலுள்ள மற்றுமொருவர் பெயர் நெஞ்சைத் தொட்டது. அவர்தான் ஈழத்துப் பூதன் தேவனார். இவர் ஒரு ஈழத்துக் கவியோ என்ற சந்தேகம் எழுந்தபோதும் அவர்தம் விபரங்கள் கிடைக்கப்பெறாதது வேதனையே.,!

படைப்பு: அம்பலத்தார்

Keine Kommentare: