Dienstag, 10. Juni 2008

ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ!

ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ!



எனக்குக் கொஞ்ச நாளா மனசு சரியில்லை. அந்தக் கதையையும் கட்டாயம் உங்களுக்குச் சொல்லவேணும் அப்பொழுதுதான் எனக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும்.
அண்மையில் நண்பரொருவர் இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் சென்றிருந்தேன்.
அப்பொழுது
அண்ணை உங்களுக்குத் தெரியுமே உங்களுக்கு வந்திருக்கிற வருத்தத்தின் தீவிரம்?
ஓ ! ஓ! தெரியாமலே சா! கிட்ட வந்திட்டது தெரியும், முடிஞ்சவரை சாகிற காலத்தைக் கொஞ்ச் ஒத்திப்போடலாம் என்று நினைக்கிறன்.
உங்களிடம் இருக்கிற கெட்ட பழக்கத்தை விட்டியளென்றாலே கனகாலத்துக்கு வாழலாம். எப்பவாவது அதைப்பற்றி யோசிச்சனிங்களே?
இன்றைக்கு நேற்றே! முதன்முதலா அரும்பின மீசையைத் தினத்துக்கும் நூறுவாட்டி கண்ணாடிக்கு முன்னாலை நின்று தடவிப்பார்த்து ரசித்த காலத்திலேயே எனக்கு அந்த ஆசையும் தொடங்கிவிட்டது.
அப்பவே ஒருநாள் தம்பிராசா கடை வாசலிலைபோய் மசிந்தி மசிந்திக்கொண்டு நின்று ஒருத்தரும் கடைக்கு வராத நேரமா பார்த்து
அண்ணை எனக்கொரு ....... தாங்கோ எண்டு கேட்கும்போது தம்பிராசா அண்ணை உதைத் தொட்டபின் விட்டவனும் இல்லை! பிறகொரு நேரத்திலை தொட்டதுக்காக வருந்தாதவனுமில்லை என்ற இலவச அறிவுரையோட அந்தச் சனியனை தர என்ரை கையில வாங்கேக்கை பயத்தில கை நடுங்கேக்ககையே நினைச்சனான் இந்த ஒருதடவைதான் முதலும் கடைசியுமாய் வாங்கினதுக்கு..... ஆசைக்கு....... ஒருதடவை பாவிச்சுப் பார்க்கிறதோட சரி பிறகு சீவியத்திலையும் தொடுகிறதில்லை என்று.
ஆனால் அடுத்தநாள் பள்ளிக்கூடத்தில முதல்நாள் தம்பிராசா கடையில வாங்கினதில இருந்து நடந்ததுகளை நண்பர்களுக்குச் சொன்னதில இருந்து அவர்கள் என்னை ஒரு கதாநாயகனாகப் பார்க்க................. அவங்களுக்கு பந்தா காட்டுவதற்காக அடுத்தநாளும் தம்பிரைசா கடையில போய் அங்குமிங்கும் பார்த்து முழிசினபடி இரண்டாவது தடவையா வாங்கேக்கை கை நடுக்கம் கொஞ்சம் குறைஞ்சமாதிரித் தெரிந்தது.
பிறகென்ன ரமேசுக்காக சிவத்துக்காக என்று அடிக்கடி தம்பிராசா கடைக்குப்போய்..................
பயம் விட்டுப்போனதுமட்டுமில்லாமல�

� சாயங்காலம் ரியுசனுக்குப் போகேக்கை சட்டைப் பொக்கற்றுக்கால பெட்டி சாடையாத் தெரியிறமாதிரி வச்சுக்கொண்டு சையிக்கிளில போறது ஒரு கவுரவம்மாதிரித் தெரிஞ்சுது.
நானும் விடாமலுக்குப் பிறகு ஒருக்காலென்றாலும்........
வராமலுக்கென்ன எத்தனையோ நாளாச் சயிக்கிளிலையும் நடந்தும் முன்னுக்கும் பின்னுக்கும் சுத்தி அவள் வசந்தியை ஒருவழியா மடக்கின பிறகு ஒருநாள் அவங்கட புகையிலைத் தோட்டத்துக்கை......... ஆளுயரப் புகையிலைக்கண்டுகளுக்கு நடுவில..... சீ விடுங்கோ ஆரும் பார்த்தால்....... என்று அவள் சிணுங்கச் சிணுங்கக் கட்டிப்பிடிச்சு ............முகத்துக்குக் கிட்டப்போக சீ சிகரெட் நாத்தம் குமட்டிக்கொண்டு வருகுது, நீங்களும் பத்துறனிங்களே? என்று திமிறிக்கொண்டு அவள் விலக
கோவிக்காதையும் இதுதான் கடைசி இனியொருநாளும் பத்தமாட்டன் இங்கை பாரும் என்ன செய்கிறனென்று சொல்லிக்கொண்டு பொக்கற்றுக்கை கிடந்த சிகரெட் பக்கற்றை எடுத்துக் காலுக்கைபோட்டு மிதிச்சன். என்றாலும் பிறகு கொஞ்சநாளிலை வசந்தியைத்தான் விட்டன் சிகரெட்டைவிடேல்லை.
சீ நீரும் ஒருமனுசனெண்டு.........
கோவியாதையும் அம்பலத்தார்
பிறகொருநாள் தோய்க்கப்போட்ட சட்டைப்பொக்கற்க்கை கிடந்த பெட்டியை பார்த்திட்டு
என்ன இது வீட்டிலை அப்பா அண்ணைமார் ஒருத்தருக்கும் இல்லாத கேடுகெட்ட பழக்கமெல்லாம் எங்கட மானத்தை வாங்குpறதுக்கென்றே கடைசி காலத்தில வந்து பிறந்திருக்கிறாய் என்று அம்மா ஒப்பாரிவைக்க...............
அம்மா! அம்மாவாணை இனி ஒருநாளும் பத்தமாட்டன் என்று வாக்குறுதியை அள்ளிவிட்டன். ஆனாலும் கடைசியில அம்மாவும் மேலபோட்டா உதைத்தான் விட்டபாடில்லை!.... கொள்ளி வச்ச கையோட நினைச்சன் சின்னனிலை உன்ரை தலையில அடிச்சுச் சத்தியம்பண்ணிப்போட்டு இத்தனை காலமா உந்தச் சனியனைவிடாத பாவம்தான் உன்னைக் கொன்றுபோட்டுதோ இப்பவே உந்தச் சனியனுக்கு முழுக்குப்போடுறன் என்று, யோசித்துக்கொண்டு சுடலையால திரும்பி தலைமுழுகின கையோட............... குளிருக்கு இதமா இருக்கட்டுமே இந்த ஒருதடவை மன்னிச்சுக்கொள்ளம்மா என்று தொட்டன் இன்றுவரை உந்தச் சனியனை விட்டுத்தொலைக்கவே இல்லை.
கல்யாணம் கட்டின புதிதில் முன்னம் வசந்தியிடம் பட்ட அனுபவம் ஞாபகத்துக்கு வர
வாசுகிக்குப் பக்கத்தில ஆசையாசையாகப் போறதென்றால்கூட எங்கை கண்டுபிடிச்சிடுவாளோ என்ற பயத்தில நல்லா குளிச்சு முழுகி வாசத்துக்கு வாய் நிறைய வெற்றிலையெல்லாம் போட்டுக்கொண்டுதான் போவன்,
ஆனால் கொஞ்ச நாளுக்குள்ளயே அவள் எதுக்கு உந்த நடிப்பு நடிக்கிறியள். நீங்கள் பத்துறது தெரியாதென்றே நினைக்கிறியள். மிரட்டிச் சொல்லித் திருத்துறதுக்கு நீங்களொன்றும் சின்னப்பாப்பா இல்லை. நீங்களா உணர்ந்தால்தான் உண்டு என்று போட்டாள் ஒருபோடு. ஆனால் அன்றுடன் எனக்கு கொஞ்சமிருந்த பயமும்போய் நடுவீட்டுக்கையே பத்தத் தொடங்கினன்.
தன்ரை தாயின்ரை சாவுக்கே காரணமாயிருந்ததுமட்டுமில்லா�

�ல் மனிசியையே மதிக்கத் தெரியாத உம்மையெல்லாம் இத்தனை நாளாக பெரிய மனுசனென்று நினைத்து நீர் சொல்லுற அறிவுரையளையெல்லாம் கேட்டன் பாரும்..........
அவ்வளவு கேவலமா நினைக்காதையும், அதுதான் பிறகு ஒரு காலகட்டத்தில் நாலு அனுபவமும் கொஞ்சம் அறிவும் வர மனச்சாட்சி உறுத்தினதிலையும் உடல் நலத்தில் ஏற்பட்ட அக்கறையிலையும் உண்மையிலையே விட்டுவிடுவம் என்று கனதரம் முயற்சி பண்ணினன்.
மனசை அடக்கிக்கொண்டு இருக்க தெருவில, கடையிலை என்று எங்கையும் போன இடத்தில ஆரும் பத்துறதைக் கண்டால் கை நடுங்கும் உடனையே பத்தவெணும்போலக்கிடக்கும் கஸ்டப்பட்டு அடக்குவன்.
காலையலை தேத்தண்ணியைக் குடிச்சிட்டுக் கக்கூசுக்கப்போனால் என்னையறியாமலே கை யன்னல் ஒட்டிலை பெட்டியைத் தேடும். வயிறெல்லாம் இறுகி அடைச்சதுபோலக் கிடக்கும். எல்லாத்துக்கும் மேலாலை கட்டுப்படுத்திக்கொண்டு ஊதாமல் இருப்பன்.
ஆனாலும் எங்கையும் சபை சந்தியிலை என்ரை நண்பர்களைச் சந்திச்சனென்றால் முடிஞ்சுது அலுவல், கொஞ்சநேரம் கதைச்சுக்கொண்டிருக்க........
ஒருக்கால் வெளியிலபோட்டுவருவமே என்று ஆராவது ஒருவர் தொடங்குவார். சரி நல்ல காத்துப் பிடிக்கட்டுமே என்று போனால், ஆளாளுக்கு ஊதத் தொடங்குவினம் நானும் கஸ்டப்பட்டு அடக்கிக்கொண்டு நிற்பன். கை காலெல்லாம் நிதானத்தில நிக்காது. வாயெல்லாம் ஒருமாதிரிக்கிடக்கும் அப்பபார்த்து ஒருத்தர்.... இந்தாரும் எங்களையெல்லாம் கண்ட சந்தோசத்தக்கு ஒன்றைப் பத்தும் என்று பக்கற்றை நீட்டுவார்.
நானும் முதலிலை வேண்டாம் வேண்டாமென்றுதான் சொல்லுவன்.
ஆனாலும் விடமாட்டினம். ஆளாளுக்கு விடமாட்டினம், என்ன நெடுகலுமே கேட்கிறம் ஒருக்கால்தானே ......... பொக்கற்றிலை பெட்டியோட வைச்சுப் பத்துமென்றெ சொல்லுறம் இண்டைக்குப் பத்தினால் இனி எப்ப காணேக்கை கேட்கிறமோ?............. இப்படியே ஆளாளுக்கு உசுப்பிவிட என்கும் ஆசை பத்திவிடும்,
ஒரு நாளைக்குத்தானே பரவாயில்லை என்று பத்துவன் பிறகென்ன பழைய கதைதான். இப்படி எத்தனைதரம் விடுகிறதும் பத்துறதுமாய்...............
சா! பக்கத்தில வரத்தான் வாழவேணுமென்று ஆசையாக்கிடக்கு! மனிசி பிள்ளையளோட கொஞ்சக் காலலத்துக்கெண்டாலும் சந்தோசமா ஒன்றா இருக்கவேணும் நாலு இடத்துக்குக் குடும்பமா போய்வரவேணும் என்று ஆசையாகக்கிடக்குது.................
மனுசன் கதைக்கமுடியாமலுக்கு விக்கிவிக்கி அழத்தொடங்கிவிட்டுது.
உமக்கு உண்மையிலையே என்னிலை அக்கறை இருந்தால் இப்படிச் செய்கிறவையளை நிறுத்தச்சொல்லும் நான் நிறுத்துறன் என்று கையைப்பிடிச்சுக் கெஞ்சுமாப்போல நாதழுதழுக்க................
என்னாலையும் கட்டுப்படுத்தமுடியாமலுக்கு மனுசனைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு அழுதிட்டன்.
ஒருவழியா விடைபெற்றுக்கொண்டு திரும்பும்போது பொக்கற்றுக்கை கிடந்த பெட்டியை எடுத்து ஆஸ்பத்திரி வாசலிலை கிடந்த குப்பைத்தொட்டியில போட்டிட்டு காரை நோக்கி மெதுவா நடந்தன்.




--------------------
சிரிக்காமல், சிந்திக்காமல் மனிதனில்லை.
நேசமுடன் அம்பலத்தார்

1 Kommentar:

நிலாமதி hat gesagt…

வணக்கம் ஆகா அம்பலம் ....நல்ல படிப்பினையான கதை. பாராடுக்கள். உங்கள் விபரம் ஜெர்மனி பாசையில் ( டொச் இல் இருக்கிறது ) ஒரு குத்து மதிப்பில் கருத்து எழுதுகிறேன். மேலும் தொடருங்கள் . வசன ங்களை சற்று ஒழுங்கு படுத்தினால் பார்க்க அழகாக் இருக்கும். யாழ் களத்திலும் இதனை வாசித்த ஒருவர் பதிந்து இருக்கிறார். அங்கும் பதிவு போட்டு உள்ளேன்.