Mittwoch, 21. Mai 2008

வேட்டியை மடிச்சுக் கட்டு

அம்பலத்தாருக்கு வாறபிரச்சனையளைக் கேட்டால் உங்களுக்குச் சிரிப்புத்தான் வருமெண்டு எனக்குத் தெரியும். வேட்டியிலையும் பிரச்சனை வருமெண்டு எவனுக்குச் சொன்னால் நம்புவான்?

இப்படித்தான் பாருங்கோ என்ர சின்னமச்சானுக்கு கொஞ்சநாளைக்கு முந்தி எங்கட நாட்டுப் புத்தகத்திலை visa அடிச்சுக் குடுத்துவிட்டாங்கள். தெரியும்தானே எங்கட ஆக்கள் உடனை என்ன செய்வினமெண்டு, பொடிப்பிள்ளையும் விட்டனோ பாரெண்டு இலங்கை, இந்தியா எண்டு ஒரு சுத்துச் சுத்திக்கொண்டு வந்தார். வந்தவன் பாவி சும்மா வந்தானே என்ர செல்லம்மாவுக்கு சீலை, சின்னவளுக்குச் சுடிதார் அது இது எண்டெல்லாம் கொணந்தான். எனக்கு ஒரு வேட்டியையும் கொணந்து தந்திட்டு அத்தார் நீங்கள்தானே கண்டவை நிண்டவையளுக்கெல்லாம் advice சொல்லிக்கொண்டு திரியுறனிங்கள். தலையுமெண்டால் நல்லா நரைச்சுக்கொண்டு போட்டுது இனி எங்கட சபைசந்தியளுக்குப் போகேக்கை உதைக்கட்டிக்கொண்டு போனியளெண்டால்தான் ஒரு பெரிய மனுசத் தோரணை வருமெண்டு சொல்லிப்போட்டுப் போட்டான்.

நானும் விலாசமா போன பொங்கல் விழாவுக்கு வேட்டியையும் கட்டிக்கொண்டு போனன். மண்டப வாசல்லையே தம் அடிச்சுக்கொண்டு நாலுபேரோட வம்பளந்துகொண்டு நிண்ட உவன் ராசுக்குட்டியன் என்னை மடக்கிப்பிடிச்சு

என்ன அம்பலத்தார் உந்தக்கோலத்திலை வாறியள்?....... வாற வழியிலை நாய் கீயொண்டும் கலைக்கேல்லையே ? எண்டான் நமட்டுச்சிரிப்போட.

எனக்குத்தெரியும் உவன் பொல்லாத குசும்பு பிடிச்சவன் இப்படி எதுவும் சொல்லுவானெண்டு, நானும் உவனை இண்டைக்கு எப்படியெண்டாலும் மடக்கோணுமெண்டு கணக்குப் போட்டுக்கொண்டு

ஏன் என்ன ராசுக்குட்டியர் நான் இப்ப என்ன அம்மணத்தோடையே வந்தனான்? உந்தச் சிரிப்பும் குசும்புக்கதையளும்தானே வேண்டாமெண்டுறது...... இல்லை அம்பலத்தார் உந்த வெள்ளையள் strassenban (போக்குவரத்துச்சாதனங்கள்) இல ஒருமாதிரியா பாத்திருக்குங்களல்லே... அதுதான் வெக்கமா கிடக்கு, அதுதான்.............

அட கதை இப்பிடிப்போகுதே..........

அப்ப என்ன உம்மட மனிசியும் ஜுன்ஸ், சேட்டோடையே வந்திருக்கிறா?

இல்லை, அது பாருங்கோ.........

பின்னை இப்ப பெண்டுகள்தான் வெக்கம் மானத்தையெல்லாம் விட்டிட்டினம் எண்டுறீரோ? அது சரி அப்ப உந்த வெள்ளையள் எங்கட நாட்டுக்கு ஊருலாப்புக்கு வரேக்க கோட்டு சூட்டோடயும், ஜுன்சோடையும் திரிய வெக்கமாக்கிடக்கெண்டு வேட்டி சட்டையும், சீலையும் கட்டிக்கொண்டே திரியுதுகள். நொண்டிச்சாட்டுக்கள் சொல்லுறதைவிட்டிட்டு மனுசிமாரைப் பாத்தெண்டாலும் நாலு நல்ல விசயங்களைப் பழகுங்கோ. கதைச்சுக் கொண்டு நிண்டு கடைசியிலை நிகழ்ச்சியைக் கோட்டைவிடப்போறம் நான் வாறன், எண்டு கதையை வெட்டிக்கொண்டு போட்டன். சும்மா சொல்லக்கூடாது நல்ல சாப்பாடும்போட்டாங்கள் அதை ஒருபிடிபிடிச்சிட்டு வெத்திலையையும் மெண்டுகொண்டு நிகழ்ச்சியளைப் பாப்பதெண்டு உக்காந்தால் பக்கத்திலையிருந்த கிட்டடியிலதான் கலியாணம் கட்டின பொடிப்பிள்ளை அப்பிடி இப்பிடி நாலு கதையளைக் கதைச்சுப்போட்டு

அண்ணை நீங்கள் வேட்டிசட்டையோடையே வந்தனிங்களோ இல்லாட்டில் இஞ்சைவந்துதான் மாத்தினனீயளே............

அட தம்பி உன்ரை மனுசி Toilet க்கை நிண்டே சீலைகட்டினவ?

இல்லையண்ணை schlafzimmer (படுக்கையறை) இலதான், எங்கட schlafzimmer பெரிசு நல்ல வசதியான வீடுதானே ஏன் கேட்டனிங்களண்ணை எண்டான் அந்தவிளாங்கா மடையன்.

இல்லையடா தம்பி உன்ரை அவ இங்கத்தைய ஆக்கள் சிரிப்பினமெண்டு இஞ்சை hall க்கு வந்துதான் சீலையை மாத்தினவவாக்குமெண்டு நினைச்சன். எண்டதும் என்னைப்பாத்து ஒருமாதிரி முறைச்சவன் அதுக்குப்பிறகு நிகழ்ச்சி முடியுமட்டும் என்னோட கதைகக்கவே இல்லை.

ஆனா பாருங்கோ நான் ஒருவிசயத்திலை M.G.R மாதிரி எனக்கும் தாய்க்குலங்களுக்கும் இடையிலை நல்ல வாரப்பாடு. எங்கையும் ஒரு விசேசத்துக்குப் போனனெண்டால்

தங்கச்சி உந்தச் சீலையை நீங்களே செலக்ற் பண்ணினனிங்கள் இண்டைக்கு வந்திருக்கிறவையள் கனபேர் உங்கட saree அந்தமாதிரி எடுப்பாயிருக்கெண்டு கதைச்சவை.

பிள்ளை உந்தச்சுடிதார் உமக்கு நல்லாபொருந்தியிருக்கு...

இந்தமாதிரி வந்திருக்கற தெரிஞ்ச பொம்பிளையளிலை பாதிப்பேருக்கெண்டாலும் சொல்லுறதுல கனபேருக்கு நல்ல சந்தோசம்.

அதோட அக்கா ஊரிலை இருக்கிற உங்கட தங்கச்சியின்ரை கலியாணப் பேச்சு எந்தளவிலை கிடக்குது?

ஊரிலையிருந்து கடிதங்கள் வருகுதோ, அப்பாவின்ரை சுகயீனம் எப்படி?

இந்தமாதிரியான குடும்ப கதையளையெல்லாம் அக்கறையோட கேக்கிறதிலயோ என்னவோ அவையளெல்லாம் என்னோட நல்லமாதிரி. அவையளெண்டால் அண்ணை நீங்கள் ஒராள்தான் சொல்லுறமாதிரிச் செய்யுறியள் மத்த ஆம்பிளையள்போல கலை, கலாச்சாரத்தைக் காப்பாத்தவேணுமெண்டு கதையளந்துபோட்டு கோட்டு சூட்டும், தண்ணிப்பாட்டியுமெண்டு திரியாமல் ஒழுங்கா இருக்கிறியள் எண்டு certificate தந்திட்டினம்.

எனக்கெண்டால் இப்பிடி நாலுபக்கக் கதையளையும் கேக்க என்னத்தைச் செய்யுறதெண்டு தெரியாமல் ஒரே குழப்பமாப் போச்சு.

விசயம் இப்பிடிக்கிடக்கப் போன கிழமை வீட்டுக்கு, வராதுவந்த மகராசனா சகலன் திடீரென வந்தார். வாசலிலேயே அவர் என்னடாவெண்டால்

அம்பலத்தார் உங்கட குடும்பமானத்தையே ஒரேயடியாக் கப்பலேத்திறதெண்டு முடிவெடுத்திட்டீரே காதிலை விழுகிற கதையளெண்டால் ஒண்டும் நல்லதாப்படேல்லை.

ஏன் என்னப்பா விசயம் நான்தானே ஒருவம்பு தும்புக்கும் போறதில்லை. சொல்லுறதெண்டால் விளக்கமாச் சொல்லும் எண்டன்.

உப்பிடித்தான் கொஞ்சக்காலத்துக்கு முந்தி உவர் சம்பந்தரும் கோயில் குளத்துக்கெண்டு கட்டத்தொடங்கின வேட்டியை சபை, சந்தி அது இது எண்டு எப்பபாத்தாலும் லூசுமாதிரி கட்டிக்கொண்டு திரிஞ்சு கடைசியிலை சபைசந்தியிலை ஒரு சனமும் மதிக்குதுகள் இல்லையெண்டு கனடாவுக்கு கம்பி நீட்டினவர். இப்ப அம்பலத்தார் தொடங்கியிருக்கிறார், உந்த ஆட்டம் எத்தனை நாளுக்கோ எண்டெல்லே சனங்கள் கதைக்குதுகள். ஒண்டுக்குள்ளை ஒண்டு சொல்லவேண்டிய கடமை சொல்லிப்போட்டன் விளங்கினால் சரிதான் எண்டுபோட்டு

செல்லம் .....உன்ர மனுசனிண்ட நடவடிக்கையளைக் கவனி எண்டுபோட்டுப் போட்டார்.

இந்தக்கதையளையெல்லாம் கேட்டதிலையிருந்து என்ரை மனுசி நானும் பாக்கிறன் வரவர உங்கட புத்தி ஏன் உப்பிடிக் குறுக்காலை போகுதெண்டு சதிராடினபடி!

எனக்கெண்டால் ஒரு வழியுமாப் புரியாமல் கடைசியிலை வெளி நாட்டிலை இருக்கிற எங்கட ஆம்பிளையள் தமிழ் கலை கலாச்சாரத்தைக் காப்பாத்துறதுக்கு என்ன என்ன செய்யலாம், என்னத்தையெல்லாம் செய்யக்கூடாதைண்டு ஒரு பஞ்சாயத்து வச்சு நல்ல முடிவாக் கெதியிலை சொல்லடா தம்பி எண்டு எங்கட I.B.C யின்ட பஞ்சாயத்துத் தலைவர் நந்தனுக்கு ஒரு கடுதாசி எழுதிப் போட்டிட்டு பாத்துக்கொண்டிருக்கிறன்.

பொன்.அம்பலத்தார

Keine Kommentare: