Dienstag, 10. Juni 2008

ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ!

ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ!



எனக்குக் கொஞ்ச நாளா மனசு சரியில்லை. அந்தக் கதையையும் கட்டாயம் உங்களுக்குச் சொல்லவேணும் அப்பொழுதுதான் எனக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும்.
அண்மையில் நண்பரொருவர் இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் சென்றிருந்தேன்.
அப்பொழுது
அண்ணை உங்களுக்குத் தெரியுமே உங்களுக்கு வந்திருக்கிற வருத்தத்தின் தீவிரம்?
ஓ ! ஓ! தெரியாமலே சா! கிட்ட வந்திட்டது தெரியும், முடிஞ்சவரை சாகிற காலத்தைக் கொஞ்ச் ஒத்திப்போடலாம் என்று நினைக்கிறன்.
உங்களிடம் இருக்கிற கெட்ட பழக்கத்தை விட்டியளென்றாலே கனகாலத்துக்கு வாழலாம். எப்பவாவது அதைப்பற்றி யோசிச்சனிங்களே?
இன்றைக்கு நேற்றே! முதன்முதலா அரும்பின மீசையைத் தினத்துக்கும் நூறுவாட்டி கண்ணாடிக்கு முன்னாலை நின்று தடவிப்பார்த்து ரசித்த காலத்திலேயே எனக்கு அந்த ஆசையும் தொடங்கிவிட்டது.
அப்பவே ஒருநாள் தம்பிராசா கடை வாசலிலைபோய் மசிந்தி மசிந்திக்கொண்டு நின்று ஒருத்தரும் கடைக்கு வராத நேரமா பார்த்து
அண்ணை எனக்கொரு ....... தாங்கோ எண்டு கேட்கும்போது தம்பிராசா அண்ணை உதைத் தொட்டபின் விட்டவனும் இல்லை! பிறகொரு நேரத்திலை தொட்டதுக்காக வருந்தாதவனுமில்லை என்ற இலவச அறிவுரையோட அந்தச் சனியனை தர என்ரை கையில வாங்கேக்கை பயத்தில கை நடுங்கேக்ககையே நினைச்சனான் இந்த ஒருதடவைதான் முதலும் கடைசியுமாய் வாங்கினதுக்கு..... ஆசைக்கு....... ஒருதடவை பாவிச்சுப் பார்க்கிறதோட சரி பிறகு சீவியத்திலையும் தொடுகிறதில்லை என்று.
ஆனால் அடுத்தநாள் பள்ளிக்கூடத்தில முதல்நாள் தம்பிராசா கடையில வாங்கினதில இருந்து நடந்ததுகளை நண்பர்களுக்குச் சொன்னதில இருந்து அவர்கள் என்னை ஒரு கதாநாயகனாகப் பார்க்க................. அவங்களுக்கு பந்தா காட்டுவதற்காக அடுத்தநாளும் தம்பிரைசா கடையில போய் அங்குமிங்கும் பார்த்து முழிசினபடி இரண்டாவது தடவையா வாங்கேக்கை கை நடுக்கம் கொஞ்சம் குறைஞ்சமாதிரித் தெரிந்தது.
பிறகென்ன ரமேசுக்காக சிவத்துக்காக என்று அடிக்கடி தம்பிராசா கடைக்குப்போய்..................
பயம் விட்டுப்போனதுமட்டுமில்லாமல�

� சாயங்காலம் ரியுசனுக்குப் போகேக்கை சட்டைப் பொக்கற்றுக்கால பெட்டி சாடையாத் தெரியிறமாதிரி வச்சுக்கொண்டு சையிக்கிளில போறது ஒரு கவுரவம்மாதிரித் தெரிஞ்சுது.
நானும் விடாமலுக்குப் பிறகு ஒருக்காலென்றாலும்........
வராமலுக்கென்ன எத்தனையோ நாளாச் சயிக்கிளிலையும் நடந்தும் முன்னுக்கும் பின்னுக்கும் சுத்தி அவள் வசந்தியை ஒருவழியா மடக்கின பிறகு ஒருநாள் அவங்கட புகையிலைத் தோட்டத்துக்கை......... ஆளுயரப் புகையிலைக்கண்டுகளுக்கு நடுவில..... சீ விடுங்கோ ஆரும் பார்த்தால்....... என்று அவள் சிணுங்கச் சிணுங்கக் கட்டிப்பிடிச்சு ............முகத்துக்குக் கிட்டப்போக சீ சிகரெட் நாத்தம் குமட்டிக்கொண்டு வருகுது, நீங்களும் பத்துறனிங்களே? என்று திமிறிக்கொண்டு அவள் விலக
கோவிக்காதையும் இதுதான் கடைசி இனியொருநாளும் பத்தமாட்டன் இங்கை பாரும் என்ன செய்கிறனென்று சொல்லிக்கொண்டு பொக்கற்றுக்கை கிடந்த சிகரெட் பக்கற்றை எடுத்துக் காலுக்கைபோட்டு மிதிச்சன். என்றாலும் பிறகு கொஞ்சநாளிலை வசந்தியைத்தான் விட்டன் சிகரெட்டைவிடேல்லை.
சீ நீரும் ஒருமனுசனெண்டு.........
கோவியாதையும் அம்பலத்தார்
பிறகொருநாள் தோய்க்கப்போட்ட சட்டைப்பொக்கற்க்கை கிடந்த பெட்டியை பார்த்திட்டு
என்ன இது வீட்டிலை அப்பா அண்ணைமார் ஒருத்தருக்கும் இல்லாத கேடுகெட்ட பழக்கமெல்லாம் எங்கட மானத்தை வாங்குpறதுக்கென்றே கடைசி காலத்தில வந்து பிறந்திருக்கிறாய் என்று அம்மா ஒப்பாரிவைக்க...............
அம்மா! அம்மாவாணை இனி ஒருநாளும் பத்தமாட்டன் என்று வாக்குறுதியை அள்ளிவிட்டன். ஆனாலும் கடைசியில அம்மாவும் மேலபோட்டா உதைத்தான் விட்டபாடில்லை!.... கொள்ளி வச்ச கையோட நினைச்சன் சின்னனிலை உன்ரை தலையில அடிச்சுச் சத்தியம்பண்ணிப்போட்டு இத்தனை காலமா உந்தச் சனியனைவிடாத பாவம்தான் உன்னைக் கொன்றுபோட்டுதோ இப்பவே உந்தச் சனியனுக்கு முழுக்குப்போடுறன் என்று, யோசித்துக்கொண்டு சுடலையால திரும்பி தலைமுழுகின கையோட............... குளிருக்கு இதமா இருக்கட்டுமே இந்த ஒருதடவை மன்னிச்சுக்கொள்ளம்மா என்று தொட்டன் இன்றுவரை உந்தச் சனியனை விட்டுத்தொலைக்கவே இல்லை.
கல்யாணம் கட்டின புதிதில் முன்னம் வசந்தியிடம் பட்ட அனுபவம் ஞாபகத்துக்கு வர
வாசுகிக்குப் பக்கத்தில ஆசையாசையாகப் போறதென்றால்கூட எங்கை கண்டுபிடிச்சிடுவாளோ என்ற பயத்தில நல்லா குளிச்சு முழுகி வாசத்துக்கு வாய் நிறைய வெற்றிலையெல்லாம் போட்டுக்கொண்டுதான் போவன்,
ஆனால் கொஞ்ச நாளுக்குள்ளயே அவள் எதுக்கு உந்த நடிப்பு நடிக்கிறியள். நீங்கள் பத்துறது தெரியாதென்றே நினைக்கிறியள். மிரட்டிச் சொல்லித் திருத்துறதுக்கு நீங்களொன்றும் சின்னப்பாப்பா இல்லை. நீங்களா உணர்ந்தால்தான் உண்டு என்று போட்டாள் ஒருபோடு. ஆனால் அன்றுடன் எனக்கு கொஞ்சமிருந்த பயமும்போய் நடுவீட்டுக்கையே பத்தத் தொடங்கினன்.
தன்ரை தாயின்ரை சாவுக்கே காரணமாயிருந்ததுமட்டுமில்லா�

�ல் மனிசியையே மதிக்கத் தெரியாத உம்மையெல்லாம் இத்தனை நாளாக பெரிய மனுசனென்று நினைத்து நீர் சொல்லுற அறிவுரையளையெல்லாம் கேட்டன் பாரும்..........
அவ்வளவு கேவலமா நினைக்காதையும், அதுதான் பிறகு ஒரு காலகட்டத்தில் நாலு அனுபவமும் கொஞ்சம் அறிவும் வர மனச்சாட்சி உறுத்தினதிலையும் உடல் நலத்தில் ஏற்பட்ட அக்கறையிலையும் உண்மையிலையே விட்டுவிடுவம் என்று கனதரம் முயற்சி பண்ணினன்.
மனசை அடக்கிக்கொண்டு இருக்க தெருவில, கடையிலை என்று எங்கையும் போன இடத்தில ஆரும் பத்துறதைக் கண்டால் கை நடுங்கும் உடனையே பத்தவெணும்போலக்கிடக்கும் கஸ்டப்பட்டு அடக்குவன்.
காலையலை தேத்தண்ணியைக் குடிச்சிட்டுக் கக்கூசுக்கப்போனால் என்னையறியாமலே கை யன்னல் ஒட்டிலை பெட்டியைத் தேடும். வயிறெல்லாம் இறுகி அடைச்சதுபோலக் கிடக்கும். எல்லாத்துக்கும் மேலாலை கட்டுப்படுத்திக்கொண்டு ஊதாமல் இருப்பன்.
ஆனாலும் எங்கையும் சபை சந்தியிலை என்ரை நண்பர்களைச் சந்திச்சனென்றால் முடிஞ்சுது அலுவல், கொஞ்சநேரம் கதைச்சுக்கொண்டிருக்க........
ஒருக்கால் வெளியிலபோட்டுவருவமே என்று ஆராவது ஒருவர் தொடங்குவார். சரி நல்ல காத்துப் பிடிக்கட்டுமே என்று போனால், ஆளாளுக்கு ஊதத் தொடங்குவினம் நானும் கஸ்டப்பட்டு அடக்கிக்கொண்டு நிற்பன். கை காலெல்லாம் நிதானத்தில நிக்காது. வாயெல்லாம் ஒருமாதிரிக்கிடக்கும் அப்பபார்த்து ஒருத்தர்.... இந்தாரும் எங்களையெல்லாம் கண்ட சந்தோசத்தக்கு ஒன்றைப் பத்தும் என்று பக்கற்றை நீட்டுவார்.
நானும் முதலிலை வேண்டாம் வேண்டாமென்றுதான் சொல்லுவன்.
ஆனாலும் விடமாட்டினம். ஆளாளுக்கு விடமாட்டினம், என்ன நெடுகலுமே கேட்கிறம் ஒருக்கால்தானே ......... பொக்கற்றிலை பெட்டியோட வைச்சுப் பத்துமென்றெ சொல்லுறம் இண்டைக்குப் பத்தினால் இனி எப்ப காணேக்கை கேட்கிறமோ?............. இப்படியே ஆளாளுக்கு உசுப்பிவிட என்கும் ஆசை பத்திவிடும்,
ஒரு நாளைக்குத்தானே பரவாயில்லை என்று பத்துவன் பிறகென்ன பழைய கதைதான். இப்படி எத்தனைதரம் விடுகிறதும் பத்துறதுமாய்...............
சா! பக்கத்தில வரத்தான் வாழவேணுமென்று ஆசையாக்கிடக்கு! மனிசி பிள்ளையளோட கொஞ்சக் காலலத்துக்கெண்டாலும் சந்தோசமா ஒன்றா இருக்கவேணும் நாலு இடத்துக்குக் குடும்பமா போய்வரவேணும் என்று ஆசையாகக்கிடக்குது.................
மனுசன் கதைக்கமுடியாமலுக்கு விக்கிவிக்கி அழத்தொடங்கிவிட்டுது.
உமக்கு உண்மையிலையே என்னிலை அக்கறை இருந்தால் இப்படிச் செய்கிறவையளை நிறுத்தச்சொல்லும் நான் நிறுத்துறன் என்று கையைப்பிடிச்சுக் கெஞ்சுமாப்போல நாதழுதழுக்க................
என்னாலையும் கட்டுப்படுத்தமுடியாமலுக்கு மனுசனைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு அழுதிட்டன்.
ஒருவழியா விடைபெற்றுக்கொண்டு திரும்பும்போது பொக்கற்றுக்கை கிடந்த பெட்டியை எடுத்து ஆஸ்பத்திரி வாசலிலை கிடந்த குப்பைத்தொட்டியில போட்டிட்டு காரை நோக்கி மெதுவா நடந்தன்.




--------------------
சிரிக்காமல், சிந்திக்காமல் மனிதனில்லை.
நேசமுடன் அம்பலத்தார்

Freitag, 23. Mai 2008

வேர்களைத் தேடி...

வேர்களைத் தேடி...


நம் பழந்தமிழ் இலக்கியங்களாம் கலிங்கத்துப்பரணி, நந்திக் கலம்பகம், புறநானூறு, குறுந்தொகை .. .. .. இவற்றில் காணப்படும் கவிநயம் படிக்கப் படிக்கத் தெவிட்டாத தேனாய் இனிக்கிறதோ இல்லையோ பலநூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இவ்வினிய கவிவரிகள் இன்றும் எவ்வாறு எம் வாழ்க்கை முறையுடன் ஒத்துப்போகின்றன என்பதுவும் வியப்பைத் தருகின்றது.

இதில் நான் படித்தது பொருளுணர்ந்து வியந்து நின்றது சொற்பமே ஆயினும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்ததில் எழுதுவதே இந்த வேர்களைத் தேடி.

பரணி உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்தபெயரென நினைக்கிறேன். இப்படிச் சொன்னவுடன் இது எங்களது களத்தில் எழுதுகிற கரவை பரணி பற்றிய விசயமாக்கும் என எண்ணவேண்டாம். நான் கூற வருவது கலிங்கத்துப் பரணி எனும் பழந்தமிழ் நூல் பற்றிய சிறுவிளக்கமாகும்.

போர்க்களத்தில் நின்று களமாடி ஆயிரம் யானைகளுக்குமேல் கொன்று குவித்து வெற்றிபெறும் மாவீரனைப் புகழ்ந்து பாடுவதே பரணியாகும். தமிழிலுள்ள 96 வகைப் பிரபந்தங்களில் இதுவும் ஒன்று. இன்று களத்தில் நின்று போராட யானைப்படையும், குதிரைப்படையும், தேர்ப்படையும், நாகாஸ்திரங்களும் இல்லாவிட்டாலும்கூட, தேர்களை ஒத்த டாங்கிப்படைகளும், இலக்கைத் தேடிச்சென்று அழிக்கும் நாகாஸ்திரங்களை நம் மனக்கண் முன் கொண்டு நிறுத்தும் ஏவுகணைகளும் நிறைந்த இன்றைய பொருது களத்தில் பல ஆயிரம் பகை ஒழித்தும், டாங்கிகள் பல சிதறடித்தும், எரிகுண்டுகள் பல உமிழ்ந்த இயந்திரக் கழுகுகள் சிறகு ஒடித்து வானம் நம் வசப்படுத்தியும் வெற்றிமேல் வெற்றிகள் படைத்து இமயமாய் உயர்ந்து நிற்கும் நம் தலைவன். அவன் விழியசைப்பில் எதிரியில் இடியாய் இறங்கக் காத்திருக்கும் பல ஆயிரம் புலிவீரர். நவீன பரணிகள் பல பாட வேண்டிய இவர்தம் வீரம். இன்றைய இந்த யதார்த்தத்தில் கலிங்கத்துப் பரணியை நோக்கி ஒரு சிறு கடைக்கண் பார்வையேனும் செலுத்துவது சாலச் சிறந்ததாகும்.

களம்பல கண்டு வெற்றிகள் குவித்த நந்திவர்மனுக்கோர் தெள்ளாற்றுப் போர்போல...
வீரத்தாலும் விவேகத்தாலும் போர்பல வென்று பரந்த தன் சாம்ராஜ்ஜியமெங்கும் புலிக்கொடி பறக்கவிட்ட முதற்குலோத்துங்கனுக்கு ஒரு கலிங்கத்துப் போர் போல....

நூற்றாண்டுகளாய் தமிழனுக்கோர் தலைகுனிவாய் அந்நியன் வசப்பட்டிருந்த ஆனையிறவுக்கான போரும் காலத்தால் அழியாது என்றும் நம் தலைவன் வீரம் சொல்லும். நந்திக்கலம்பகமும், கலிங்கத்துப் பரணியும் போல நம் கவி புதுவை இரத்தினதுரையும், உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தனும், அம்புலியும் தரும் கவிகளும் ஈழத்துப் பரணியாய் இப்புவி உள்ளவரை நிலைத்திருக்கும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே நம் கனவும்.
இனி..
அழகிய மணலாற்றுப் பகுதியின் பசுமைகள் நிறைந்த வனப்புமிக்கதொரு சிறிய கிராமம். வளங்கள் பல இருந்தும் போரின் அனர்த்தங்களால் ஏழ்மையில் வாடும் சூதுவாதற்ற அம்மண்ணின் மைந்தர்கள்.
குருவிக்கும் தன் கூடென்பதுபோல நேர்த்தியாய் வேயப்பட்டு அழகுறச் சாணியால் மெழுகப்பட்ட சிறுகுடில். அழகிய தன் மனைவிக்கும், வாழ்வின் சோகங்கள் எதுவும் புரியாது சிட்டாய் சிறகடித்துத் திரியும் தன் சின்னஞ்சிறு வாரிசுகள் இரண்டுக்குமாய் தோட்டம் துரவு என ஓடியோடி உழைக்கும் அதன் தலைவன். அன்பிலும் காதலிலும் கட்டுண்ட அச்சிறு கூட்டின் தலைவனுக்கு அன்றொருநாள் ஓர் சேதி வந்தது. எம்மண் பறிக்க வருகிறது நம் பகை. எல்லைப்படை வீரனாய் புகுக களம். மறத்தமிழன் பண்டாரவன்னியன் வழித்தோன்றல் அல்லவா? என்னதான் கஸ்டங்களும் சோகங்களும் வந்தாலும் அவன் வீரம் சோடைபோகுமா என்ன? புறப்பட்டான் குடும்பத்தின் தலைவன் களம் நோக்கி...

பிழைநினைந்து உருகி அணைவுறா மகிழ்நர்
பிரிதலல் அஞ்சிவிடு கண்கள்நீர்
மழைததும்ப விரல் தரையில் எழுதும்
மடநலீர் கடைகள் திறமினோ.

உங்கள் கணவர் உங்களைவிட்டுப் பிரிந்து நாட்டுக்காய் அவர் மேற்கொண்ட கடமையில் செல்ல முனையும்போது உங்களால் அவரைத் தடை செய்யவும் முடியாமல் இனிதாக வழியனுப்பி வைக்கவும் முடியாமல் மௌனமாய் கண்ணீர் வடித்தும், கால்களால் தரையில் கீறியும் நின்ற பெண்ணே உன் கணவன் பகை வென்று வருகிறான் உங்கள் வீட்டின் கதவுகளைத் திறவுங்கள் என்பதாய் அமையும் இப்பாடல் வரிகள், இச்சிறு குடிலின் தலைவியை நோக்கிப் பாடுவதாய் கன கச்சிதமாய் இன்றும் நம் கள நிலைக்குப் பொருந்தவில்லையா என்ன?

வேர்களைத் தேடி............

புறநானூறு என்று சொன்னால் எம்மில் எத்தனை பேருக்கு அதன் விபரம் தெரியுமோ என்னவோ? ஆனால்...

சில நாட்களின் முன் நடந்தபோரில் தந்தையை இழந்த பெண், முதல் நாள் நடந்த போரில் தன் கணவனை இழந்தும் கூட கலங்காது, அடுத்த நாளும் போர்ப்பறை கேட்டதும் தன் வீட்டிலிருந்து இன்றும் போர்முனைக்கு ஒருவரை அனுப்ப வேண்டும் என்று எண்ணி, பச்சிளம் பாலகனான தன் ஒரே மகன் கையில் வீர வாளைக் கொடுத்து "வென்று வா மகனே!" என்று போருக்கு அனுப்பிய வீரம் சொல்லும் புறநானூற்றுக் கதை நன்கு தெரியும்.
புறநானூறானது நாமெல்லாம் எண்ணுவதுபோல வீரத்தை மட்டுமன்றி மன்னர் தம் ஈகைச் சிறப்பையும், தமிழர் நம் வாழ்வியலையும், வாழ்த்தியலையும், புலவர்தம் கையறு நிலையையும் எனப் பல பரிணாமங்களையும் தொட்டு நிற்கும் நானூறு பாடல்களின் கதம்பத் தொகுப்பாகும். இந்தப்பாடல்கள் பல்வேறு காலகட்டங்களில் ஒளவையார், கபிலர், கோவூர்கிழார், பெருந்தலைச்சாத்தனார், போன்ற நாம் சற்றே கேள்விப்பட்ட புலவர்களினாலும், சற்றும் அறியப்படாத வேறும் பலநூறு புலவர்களினாலும் பாடப்பட்டுள்ளன. அதியமான் முதல் கோப்பெருஞ்சோளன், சேரன் இரும்பொறை.............. எனப் புகழ்ந்து பாடப்பட்ட மன்னரின் பெயர்ப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இது தவிரப் பல புறநானூற்றுப் பாடல்களைப் பாடியவர்கள் பற்றிய விபரங்கள் அறியப்படாமலும் பல பாடல்களின் வரிகள் பல கிடைக்கப் பெறாமலும் உள்ளன.

ஒளவ்வை பாட்டி நெடுநாள் வாழ மன்னன் அதியமான் நெடுமான் நெல்லிக்கனி கொடுத்த கதைதான் எமக்கெல்லாம் பரிச்சயமான கதை, ஆனால் ஒளவ்வைக்கு அதியமான் கள்ளுண்ண கொடுத்ததுவும் அதை உண்ட மயக்கத்தில் பாடல் ஆக்க அதியமான் அந்தப் பாடல்களை இரசித்ததாக ஒளவ்வையே கவி வடித்திருப்பதும் நமக்கெல்லாம் புதிய சேதி அல்லவோ?

சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே..............

என்று தொடங்கும் புறநானூற்று பாடல் வரிகளைச் சற்றே பாருங்கள்.

சிறிது மதுவைப் பெற்றால் அதை எங்களுக்கே தருவான். பெரிய அளவில் மது கிடைத்தாலோ அதை நாங்கள் அருந்திப் பாட எஞ்சியதை உண்பான் அதியமான் எனப் பொருள் தரும் இப் பாடல் வரிகள். மது அருந்தும் பண்பால் ஒளவ்வையார் நாமெல்லாம் எண்ணுவது போலப் பெண் புலவரல்ல ஆண் கவியோ என்ற ஐயத்தைத் தருகிறதே. அன்றி நாம் அறிந்தது போல ஒளவ்வை பெண் கவியே ஆயின் அன்றைய நாளில் பெண்கள் மது அருந்தும் கலாச்சாரம் எமக்கு இருந்ததோ என்ற அடுத்த கேள்வியைத் தோற்றுவிக்கிறதே! இந்த ஊகமும் தவறாயின் ஒளவ்வை என்ற பெயரில் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு புலவர்கள் வாழ்ந்தார்களோ என்ற மற்றுமொரு கேள்வி எழுகிறதே.

இவ்வாறு சர்ச்சைகள் பலவற்றையும், அன்றைய நம் கலாச்சார விழுமியங்களையும் கூறி நிற்கும் புறநானூற்றின் மற்றொரு பாடல். எந்தப் புலவாரால் எந்தச் சந்தர்ப்பத்தில் பாடப்பட்டது என்பது கூட அறியப்படாமலும் பாடலின் சில வரிகள் கிடைக்கப்பெறாமலும் உள்ள இப்பாடலின் வரிகள் கூறும் சேதியைச் சற்றே நோக்கினால் ..........

பகைவர்களால் வீசப்பட்ட வேலொன்று நெஞ்சிலே பாயவும், அவன் இவ்வுலகில் பிறந்த கடனை தன் நாட்டிற்காகவே வாழ்ந்து தீர்த்துக் கொண்டான். அவன் எங்கே உள்ளான் என்று கேட்டால்......................... எதிரிகள் பலரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவனோ அவர்களை வீரமுடன் உக்கிரமாய் எதிர்த்து விரட்டிச் சென்றான். அவன் மார்பில் வில்லும் வேலும் பாய்ந்தன. அவன் உடல் அழிய ஆரம்பித்துவிட்டது. அவன் கேடயம் சிதைவுபட்டுச் சிதறிக் கிடைப்பதைக் கண்டோம். அவன் புலவர்கள் பாடுகின்ற சிறப்பைப் பெற்றுவிட்டான். எல்லாத் திசைகளிலும் தன் புகழ் பரவச் செய்துவிட்டான். அவன் அமரனாகிவிட்டான். என்ற பொருள்படும் அப்பாடல்

எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை
யாண்டுள னோவென வினவுதி ஆயின்
.......................(இடை வரிகள் கிடைக்கப் பெறவில்லை.)
வருபடை தாங்கிய கிளர்தார் அகலம்
அருங்கடன் இறுமார் வயவர் எறிய
உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே
மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
.......................(இடை வரிகள் கிடைக்கப் பெறவில்லை.)
அலகை போகிச் சிதைந்துவேறு ஆகிய
பலகை அல்லது களத்துஒழி யாதே
சேண்விளங்கு நல்லிசை நிறீஇ
நாநவில் புலவர்வாய் உளானே.

ஈழத்தின் எல்லைகளிலுள்ள ஏதோ ஒரு பொருது களத்தில் எதிரிகளுடன் கடுமையாகச் சமர் செய்து பல எதிரிகள் கதை முடித்து முன்னேறுகிறான் புலி வீரன் ஒருவன். எதிர்பாராத விதமாக கூட்டமாக சூழ்ந்து கொண்ட எதிரிகள் செலுத்திய தோட்டாக்களை மார்பில் தாங்கி வீரமரணமடையும் முகம் தெரியா அப்போராளி மாவீரனான சேதி எம்மனதை வாட்டுவதில்லையா? அவன் வீரத்தை நம் தமிழ்க் கவிகள் புகழ்ந்து பாடுவதும், மண்ணுக்கு வித்தான அந்த மாவீரனை மாவிரர் துயிலகத்தில் மட்டுமன்றி நம் மனதிலும் வைத்துப் பூசிக்கும் இன்றைய எம் பண்பின் ஆணி வேராக இப்பாடல் தென்படவில்லையா என்ன?

என்ன நேயர்களே வேர்களைத் தேடி அகழ்ந்ததில் உடலெங்கும் சேற்றையும் மண்ணையும் பூசிக்கொண்ட சலிப்பு உண்டாகிறதா? அல்லது தேடுதல் இல்லையென்றால் வாழ்க்கையில் சுவாரசியம் இல்லை என்பது சரிதானா? அப்படியாயின் தொடர்ந்தும் வேர்களைத் தேடுவோம். எங்கள் சமுதாய விழுமியங்களின் வேர்கள் மட்டுமன்றி புதையல்களும் கிடைக்கலாம்.

வேர்களைத் தேடி............

ஈழத்துப் பரணியாய் இப்புவி உள்ளவரை நிலைத்திருக்கும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே நம் கனவும். இனி..
அன்றொருநாள் வேர்களைத் தேட ஆரம்பித்தபோது சொன்ன அந்த எல்லைப்படை வீரனது கதை ஞபகமிருக்கும் என நினைக்கிறேன்.

களமாடச் சென்ற அந்த குடும்பத் தலைவன் எதிரிகளை புறமுதுகிட்டுப் பழைய நிலைகளுக்கே விரட்டியடித்த வெற்றிக் களிப்புடனும், தன் இல்லாளும் சிறிய வாரிசுகள் இரண்டும் எவ்வாறு உள்ளனரோ? என்ற ஏக்கத்துடனும் வீடு நோக்கி நடக்கின்றான். மிகவும் கடினமான சூழ்சிலைகளில் நின்று ஊன் உறக்கமின்றி போரிட்ட களைப்பை அவன் தளர்ந்த நடை சொல்லாமல் சொல்கிறது.

தலைவாசலில் தந்தையைக் கண்டு அப்பா என ஓடிவரும் தனையனை அள்ளி முத்தமிடுகிறான் தலைவன். அந்த இனிய கணத்தையும் தாண்டி அவன் மனதில் என்றுதான் இந்தப் போர்ச் சூழல் தணிந்து சுதந்திரக்காற்று வீசுமோ என்ற ஏக்கமும், பிரிவின் சலிப்பும் ஒருங்கே தோன்ற அவனையும் மீறி நீண்டதொரு பெரு மூச்சு வருகிறது.

தலைவன் வரவால் பூரிப்பு அடைந்த தலைவியின் மனமோ அவனது உள்ளக் குமுறலை உணர்ந்து மறுபுறம் தவித்துப்போனது.

மகனை அள்ளி முகரும் கணவன் அருகே சென்று, அந்த மௌனமான வேளையில் மெதுவாக பின்புறாய் அவனைத் தழுவி தன் ஸ்பரிசத்தால் தலைவனது மனதின் காயங்களுக்கு ஒத்தடமிடுகிறாள் தலைவி. இந்தக் காட்சியை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.

"கண்டிசின் பாண பண்புஉடைத்து அம்ம
மாலை விரிந்த பசுவெண் நிலவின்
குறுந்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப்
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇப்
புதல்வன் தழீஇயினன் விறலவன்
புதல்வன் தாய் அவன் புறம்கவைஇ யினனே."

அந்தி வந்த நேரமதில் நன்கு பரந்த இனிய நிலவின் ஒளியில் குறுகிய கால்களைக் கொண்ட கட்டிலில் நறுமணம் வீசும் மலர்களைப் பரப்பி அதில் பள்ளி கொள்ளும் யானையின் பெருமூச்சை போன்றதொரு பெருமூச்சை விட்டவாறு வெற்றி மிகு தலைவன் தன் புதல்வனை தழுவி மகிழ்ந்தான். இதனைக் கண்ட தலைவியோ பின்புறாய் தலைவனின் முதுகைத் தழுவி நின்றாள். இது நல்ல பண்புடைய செயலாகும் என்பதாக அமையும் இந்தக குறுந்தொகைப் பாடல் இன்றைய நம் தலைவனுக்கும் தலைவியுக்குமாய் எழுதப்பட்டதாய் அமைந்த மாயம் கண்டீரோ?

வேர்களைத் தேடி............

இனி, குறுந்தொகையின்பால் சற்றே பார்வையை திருப்பினால் இதுவும் நம் முன்னோரின் காதல் நயத்தையும், வீரத்தையும், குறிஞ்சி, மருதம், நெய்தல, பாலை என நால்வகை நிலங்களின் நயம்படு வாழ்க்கை முறைகளையும் நமக்கெல்லாம் பறைசாற்றி நிற்கும் இனிய கவிநயம்மிக்க 401 பாடல்களின் தொகுப்பாகும்.

இப்பாடல்களையும் கோவூர்கிழார், ஒளவையார், பரணர், நக்கீரன், கபிலர், சீதலைச்சாத்தனார் போன்ற புலவர்களுடன் வேறு பல புலவர்களும் பாடியுள்ளார்கள். இங்கு சீதலைச்சாத்தனார் பற்றிய குறிப்பொன்று ஞாபகத்துக்கு வந்தது........ அவர் தான் பாடும் கவிகளில் தவறு ஏற்படும்போதெல்லாம் தன் தலையில் எழுத்தாணியால் குத்தி கொள்வாராம். இதனால் சாத்தனாருடைய தலையில் எப்பொழுதும் சீழ்படிந்த புண்கள் காணப்படுமாம். இது சீழ் தலை சாத்தனார் என்ற அடைமொழியை தந்து காலப்போக்கில் அதுவும் மருவி சீதலைச்சாத்தனார் ஆனாராம். இத்துடன் சிறைக்குடி ஆந்தையார், குப்பைக்கோழியார், வெள்ளி வீதியார் என வேடிக்கையான பெயர்களைக் கொண்ட புலவர் பலரும் குறுந்தொகைப் பாடல்களை பாடியுள்ளனர். புலவர் பட்டியலிலுள்ள மற்றுமொருவர் பெயர் நெஞ்சைத் தொட்டது. அவர்தான் ஈழத்துப் பூதன் தேவனார். இவர் ஒரு ஈழத்துக் கவியோ என்ற சந்தேகம் எழுந்தபோதும் அவர்தம் விபரங்கள் கிடைக்கப்பெறாதது வேதனையே.,!

படைப்பு: அம்பலத்தார்

Mittwoch, 21. Mai 2008

உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்

உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்
------------------------------------------------
தனிமனிதனுக்குணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் முழங்கினான் பாரதி.
தீன் உண்டு விலங்கிற்குஇரை உண்டு பறவைக்குநீருண்டு நிலத்திற்குஎமக்குண்டா உணவு?வன்னிக்காட்டிலே விலங்குகள்போல்உணவுதேடித் திரிகிறார் எம்மக்கள்
பிஞ்சுகள் வாடுதுகஞ்சிக்கே கதியின்றிகூன் உடம்புகள் வதங்குதுகூழுக்கே வழியின்றிவற்றிய உடம்புடன் கற்பிணித்தாய்மார்விட்டிடலாமா? அவர்தம் உண்டி சுருங்கிட? ஒரு நாளும் இல்லை
உணவை ஒறுத்த அன்னைபுபதிஉண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் உண்டியை விடுத்து உயிரையும் விடுத்தஇவர்கள் கேட்டது பட்டமா பதவியாகேட்டது நீதியும் உரிமையும் இன்றும் வன்னிக்காட்டிலேஎத்தனை திலீபன் எத்தனை புபதிசெத்தும் மடிந்தும் சாவின் விழிம்பிலும்
ஈழம் மலரும் நாளைநாடு செழிக்கும் நாளைஅகன்றிடும் பசியும் பிணியும்அன்றுவரை அன்னிய அரசுக்கு அடிபணியாமல் காத்திடுவோமெனஉறுதியுடனிருக்கும் எம்புலத்துறவுகளுக்குஒருவேளை உணவைஒறுத்தேனும் உதவிடுவோம்
தேனும் ஊனும் காயும் கனியும்அன்பும் சேர்த்துஅளித்த குகனைநால்வர் நாங்கள் இன்றுடன் ஐவரானோம் என அணைத்தான் இராமன்
அமுதசுரபி எங்கள் ஈழம்அவளின் பிள்ளைகள் நாங்கள்; ஈழத்தாய்மடியில் தவழ்ந்து புரண்டஉண்டு உறங்கிய வசந்தகாலத்தைமுடியுமா மறந்திட?எம்புலத்துறவுகளின் அவலநிலை மாறஒன்றாய் இணைவோம் சொல்லிலல்ல செயலில் காட்டுவோம்
நன்றி. கௌரி மகேஸ்.

வானம் எம் வசம்

வானம் எம் வசம்
பால் வெளியிலுள்ள ஏதோ ஒரு அல்லது பல நட்சத்திரக் குடும்பங்களிலுள்ள உபகோள்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றித்தாங்கள் கூறிய விடயங்கள் விஞ்ஞானிகளாலும் தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உள்ளது. அப்படி ஏதாவது ஒரு கோளில் எம்மைவிட விஞ்ஞான,தொழில்நுட்ப அறிவுபெற்ற உயிரினங்கள் இருந்தாலும் அவர்கள் ஆய்வுகளுக்காகவோ அன்றி வேறேதோ ஒரு காரணத்திற்காகவோ இப்புவிக்கு வந்து சென்றார்களா? என்பதே சர்ச்சைக்குரிய விடயமாகும். இவ்வாறுவந்ததற்குச் சான்றாகக் கூறப்படுவன.1.சிலரால் பார்த்ததாகச் சொல்லப்படும் அல்லது புகைப்படமெடுத்ததாகக் காண்பிக்கப்படும் வட்டவடிவான ஒளிப்பிளம்புபோன்ற அல்லது பறக்கும்தட்டு எனப்படும்பொருள.;.அல்லது கூடுதலாக சிறய தனியார் விமானிகளாலும் சில சமயங்களில் சாதாரணபோக்குவரத்து விமானிகளாலும் வானில் கண்டதாகக் கூறப்படும் ஏவுகணைகளையொத்த அசாதாரண பொருட்கள். இவை சம்பந்தமாக ஆய்வுகளை மேற்கொண்ட சோவியத் விஞ்ஞானிளொருவர் கூறுகிறார்";.இவற்றில் 99 சத வீதமானவற்றிற்குரிய காரணங்களாக சோவியத்தில் இராணுவ, வானியல் சம்பந்தமான ஆய்வுகள் அரசாங்கத்தால் பொது மக்களுக்கு மறைக்கப்படுவதால் இவ்ஆய்வுகள் சம்பந்தமான செயற்கைக் கோள்கள், ஏவுகணைகளைத் தற்செயலாகக் கண்டவர்கள் ஏற்படுத்தும் குழப்பமே இவை. மற்றும் 1வீதம் தற்செயலாக நடந்த சில நிகழ்வுகளே".( ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது: ஊரில் எமது அயலவர் நடுச்சாமம் படம் பார்த்து விட்டு சைக்கிளுக்குக் காத்துப் போனதால் உருட்டிக்கொண்டு வரும்போது வைரவர் கோயிலடியில் நிலத்தில் கால் முட்டாமல்ப் பேய் நடந்து வருகுது எனக் கத்திக் கொண்டு சைக்கிளையும் போட்டு விட்டு ஓடி வந்தவர். காலையில்ப் போய்ப் பார்த்தால் அது கோயில்க் கிணற்றடியில் யாரோ குளித்துவிட்டு எடுக்க மறந்து போய் மரத்தில் காய்ந்து கொண்டிருந்த வேட்டி !......)2. ஆதாரமாக் காட்டப்பட்ட புகைப்படங்களில் அநேகமானவை ஏமாற்றுவழிகளில் எடுக்கப்பட்டிருந்தது நிருபிக்ககப்பட்டுள்ளது. வானில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்ய நிறுவப்பட்டடுள்ள புகைப் படக் கருவிகள் இன்று வரை இப்படியான எதையும் பதிவு செய்யவில்லை.3. பல நாடுகளில்( அமரிக்கா,இங்கிலாந்து,சுவீடன்) பயிர்களுக்கு நடுவே வட்ட வடிவில் ஏற்படும் சேதங்கள் . இதன் உச்சக்கட்டமாக 2 வட்டங்கள் அருகே இருந்து அதை இணைப்பதாக காலடிச்சுவடுகளும் இருப்பதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.இது அந்நிய கிரகப் பறக்கும் தட்டால் ஏற்படுகிறதா என ஆராய்ச்சி செய்ததாகக் கூறிக்கொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த Pயவ னுநடபயனழ என்பவர் 5 புத்தகங்கள் வரை எழுதிப் பெரும் பணக்காரனாரார். பின் மேற்கொண்டும் ஆராய்ச்சி செய்வதாகக் கூறிக்கொண்டு அமரிக்காவில் தங்கினார். அண்மையில் சுவீடன் நாட்டு ஆராய்ச்சி நிறுவன வல்லுனர் ஓருவரிற்கு அவர் அளித்த பேட்டியில் இவை நம்புவதற்கு அற்ற ஏமாற்றுச் செயல்களெனத் தான் ஒத்துக்கொள்வதாகக் கூறினார். பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் சுவீடன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வாறான நிகழ்வைத் தானும் 2 நண்பர்களுமாகச் செய்ததாக 18 வயது இளைஞர் ஓருவர் ஆதாரங்களுடன் ஒத்துக்கொண்டார்.4. இவ்வாறு காணப்பட்ட எந்தச் சந்தர்ப்பத்திலும் அவ்விடத்தில் இப்புவியில் காணப்படாத அல்லது அவ்விடச் சுழலிற்கு ஒவ்வாத எப்பொருளுமே தடயமாகக் கிடைக்கவில்லை.
நமது தேசத்தின் வான்பரப்பில் காணப்பட்ட விவரம் தெரியாத பொருட்கள் உண்மையாகக் காணப்பட்டதாக வானியல் ஆராய்ச்சி மையமும் ஊர்ஜிதப்படுத்தியிருப்பதால் முன்னே நான் ஆய்வு செய்த விடயங்களுடன் இவற்றைத் தொடுத்துப் பார்க்கும் போது ஒருசந்தேகம் எழுகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் அமெரிக்கா தனது அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு இடையூறாக இருக்கும் அமைப்புக்களையும், ஒடுக்கு முறைகளுக்கு எதிராகத் தோன்றிய விடுதலைப் போராட்டங்களையும் தனது இரும்புக்கரம் கொண்டு நசுக்குவது நாம் அறிந்ததே. இதில் அமெரிக்காவுக்கு அதன் நேச நாடுகள் மட்டுமன்றி பயங்கரவாதத்தின் பிறப்பிடங்களான பாகிஸ்தான் அரசு, இலங்கை அரசு போன்றவையும் தமது சொந்த நலன்களுக்னகாக ஆதரவு தெரிவிப்பதுவும் அதை அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டுள்ளதும் அறிந்ததே. அமெரிக்க இராணுவத்தின் நெறியாள்கை மற்றும் பயிற்ச்சிகள் போன்றவற்றையெல்லாம் முறியடித்து விடுதலைப் புலிகள் அமைப்பு களத்தில் வெற்றிகள் குவிப்பது அதன் கண்களை நெடுநாட்களாக உறுத்திவருவதால் , இன்றைய சமாதானச் சூழலைப் பயன்படுத்தி எமது பகுதிகளில் அமெரிக்காவோ அல்லது அதன் நேச நாடுகளோ நடத்தும் வேவு நடவடிக்கையின் ஒரு அம்சமாக இது இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அண்மையில் இங்கிலாந்து அரசு அவசரம் அவசரமாக யாழ் மணிக்கூண்டுக் கோபுரத்துக்கு அளித்த மணிக்கூட்டு இயந்திரங்களும் வேறேதும் நோக்கங்களுக்காக கொடுக்கப்பட்டதோ என்பதும் ஆராயப்பட வேண்டியதே.போராட்ட அமைப்புகளுக்கு என்றும் தேவை எச்சரிக்கையும் எதையும் சந்தேகக் கண்களுடன் நோக்கும் பண்பும.; இதில் எமது அமைப்பு எப்பொழுதும் சரியான வழியிலேயே செயல்பட்டு வந்திருப்பதனால் இன்றும் அவர்கள்மீதுள்ள நம்பிக்கையில் வானம் என்றும் எம் வசமே என நாம் ஆறுதலடையலாம்.
ஆக்கம்: அம்பலத்தார்

அந்த அழகிய பிறந்ததினப் பரிசுகள்!

அந்த அழகிய பிறந்ததினப் பரிசுகள்!

எங்கள் மகள் சௌம்யாவையும்,சாராவையும் கூட்டிக்கொண்டு பாலர் பாடசாலை போகிற நாட்களிலெல்லாம் பிஞ்சு விரலைப் பிடித்து மண்ணில் 'அ ' எழுதிய காலங்கள் என் மனத்தில் மின்னி மின்னி மறையும். அதைப் பிள்ளைகளுக்குச் சொன்னால் "அப்ப நீங்கள் படித்த Kinder garden ல் 5,6 விளையாட்டுச்சாமான் கூட இல்லையா" என்று பிள்ளைகள் அனுதாபத்துடன் என்னை ஒரு பார்வை! பிறகு அண்ணணும் தங்கையுமாக ஏதோ குசுகுசுப்பு!

லிசா வீடும் அருகிலேயே இருப்பதால் ஒரு வாரம் நாங்கள் சாராவையும் சௌம்யாவையும் Kinder garden ற்குக் கூட்டச் சென்று கூட்டி வருவது அடுத்த வாரம் சாராவின் அம்மாவிற்கு அந்த வேலை.

சாராவின் அப்பா டெனிஸ் 300 கி.மீ இற்கப்பாலுள்ள ஓர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இது அவர்களின் சொந்த வீடென்பதுவும் டேனிஸ் வேலை பார்க்கும் நிறுவனம் அவரைப் பல ஊர்களிலுமுள்ள கிளை நிறுவனங்களிற்கும் அனுப்புவதால் அவர்கள் இங்கேயே இருக்க டெனிஸ் வார இறுதிகளில் வருவார். சில நாட்களில் இவர்கள் அங்கு போவார்கள்.

கோடைகாலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பித்த ஒரு நாளில் கின்டர் காடினில் ஒன்று கூடல் விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகளெல்லாம் வர்ணங்கள் பூசப்பட்ட முகத்துடன் வண்ணத்துப்பூச்சிகளாக, வண்டுகளாக, கரடிகளாக, புலிகளாக வளைய வந்து கொண்டிருந்தன. மாலைச் சூரியன் பரவி விரிந்திருந்த மரங்களினுடே ஒளிப்பொட்டுக்களை பூமித்தாய்க்கு இட்டிருந்தான். மரபெஞ்சுகளில் ஓய்வாக இருந்தபடி பெரியவர்கள் பியரை இராட்சதக் குழச்தை போலக் கொழுத்திருந்த கிளாஸ்களில் அருந்தினர். பின்னர் உணவுகள் நிறையவே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிகளை நோக்கிப் படையெடுத்தனர். பொதுவாக இப்படியான விழாக்களுக்கு எமது உணவு வகைகளையே செய்துகொண்டு போவதை நான் அண்மைக்காலத்தில் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஒரு தட்டில் உணவுகளை நிறைத்தபடி வந்து எங்களுக்கருகில் அமர்ந்தார் டெனிஸ். அவரின் தட்டில் எங்கள் நாட்டுணவுகள் நிறைந்திருந்தன. அதைப் பார்த்த எனக்குள் ஓர் மகிழ்ச்சி பரவியது. அவர் சொன்னார் "எனக்கு இந்தச் சுவையான ஆசிய உணவுகளை அறிமுகம் செய்தது எனது முன்னாள் காதலியாக இருந்த லிசாதான். எங்கள் முகத்தில் வந்து விழுந்த குழப்ப ரேகைகளைப் பார்த்த டெனிஸ் ஒரு குறும்புச் சிரிப்புடன் கூறினார் " எனது முதற் காதலியின் பெயரும் லிசாதான். அவளும் நானும் இந்திய ரெஸ்டோரன்டுகளை நாடித்தான் எப்போதும் போவோம்"..... .

உள்ளே போன பியரும் நன்றாக வேலை செய்யவே டெனிஸின் வாயிலிருந்து வார்த்தைகள் வழுக்கியபடி உதிர்ந்தன.

"எனது இளமைக் கால வாழ்வில் மிகத் துயரமான சம்பவங்களும் மிகச் சந்தோசமான தருணங்களும் வாய்த்தன. எனது அம்மா ஓரு விபத்தில் காலமானபின் அப்பாவினது முழு அன்பில் நனைந்தபடி வளர்க்கப்பட்ட பிள்ளைதான் நான். லீவுகளுக்குப் போய்விட்டு வரும்போது எனது பாட்டியும் தாத்தாவும் தம்மிடம் என்னை விடும்படி கேட்டும் அப்பா மறுத்துவிடுவார். அம்மா இறந்த பின்னர் வேறு எந்தப் பெண்ணுடனும் சேர்ந்து வாழவும் அப்பா முற்படவில்லை........" அப்பொழுது சாரா சொன்னார்" இந்தக் கதை இனி முடிந்தபின்தான் நிற்பாட்டுவீர்களா? அல்லது இடைவேளை உண்டா?" செல்லமாக அவவை அடிக்கக் கையை ஓங்கினார் டெனிஸ். ஒரு பஸ்ஸை விட்டால் அடுத்ததாக வரும் கடுகதி பஸ்ஸில் பாய்ந்து ஏறுவதில் அனைத்து ஜேர்மனியரும் கில்லாடிகள் என எம்மில் பலர் நினைக்கிறோமல்லவா! அது எவ்வளவு தவறான கருத்தென்பதை நேரடியாக அனுபவத்தில் காணும் சந்தர்ப்பங்கள் பல தடவை எனக்கு ஏற்பட்டிருக்கின்றன. மிக அழகான கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பில் கூட்டுக்குடும்பங்களாகப், பாச வலையில்ச் சிக்கி வாழும் பலரை இன்றும் ஜேர்மன் கிராமங்களிற் காணலாம். அதனால் டெனிஸின் அப்பாவைப் பற்றிய விடயம் என்னுள் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. .. "கடவுள் நல்ல மனிதரைத்தான் சோதிப்பான் என்பார்கள். கெட்டவனென்றால் தண்டிப்பான் என்பார்கள் ...... சரி அது எதற்கு இங்கு.......... எனது தந்தைக்கு கடுமையான தலையிடி மணிக்கணக்கில் நாட்கணக்கில் தொடர்வதும் திடீரென மயங்கியும் இரு தடவை விழுந்து விடவே வைத்திய நிபுணர்கள் பல வித பரிசோதனைக்கெல்லாம் அவரை உட்படுத்தினர். இறுதியாகக் மூளையில்க் கட்டி இருப்பதைக் கண்டு பிடித்தனர்.. அதன்பின் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். என்னை உலுக்கியெடுத்த இந்த அதிர்ச்சியைச் சமாளிக்க முடியாமல் நான் தவித்துவிட்டேன். என்னதான் வைத்திய வசதிகள் பெருகிய நாடென்றாலும் நெருக்கமானவர்களிற்கு ஆபத்தான நோய் எனும்போது இந்ந மனம்படுகிறபாடு இருக்கிறதே! இங்கும் மனிதர்கள் வைத்தியம் பலனளிக்காமல் மறையும் நிதர்சனம் எம்முன் விரிந்து கிடக்கிறதல்லவா. எத்தனை தடவைதான் வைத்தியர்களும் தாம் செய்யவிருக்கும் சிகிச்சைகள் பற்றி பொறுமையாக எனக்கு விளங்கப்படுத்தியும் எனது மனம் சமாதானமாகாமல் இரவுகளெல்லாம் துங்கா இரவுகளாயின. எந்தத் தகப்பனிற்குத்தான் சிவந்து சோர்ந்த கண்ணுடன் தன்னிடம் வரும் தன் மகனைக் காணச் சகிக்கும்? பல சந்தர்ப்பங்களில் எனக்கு ஆறுதல் கூறியபடி தானும் தேம்புவார் அப்பா. ஒரு நிமிடம" என்றுவிட்டு மீன்டும் உணவுகளை நிறைத்து வர அப்பால் நகர்ந்தார் டெனிஸ்.

லிசாவின் முகத்திலும் சோகச் சாயல் அப்போது படர்ந்திருந்தது. லிசா மெதுவான குரலில் கூறினார் "டெனிசின் இளமைக் கால அதிர்ச்சிகள் இன்னும் அவரை வதைக்கத்தான் செய்கின்றன.

உணவுத்தட்டுடன் வந்த டெனிஸ் மீண்டும் தொடர்ந்தார். எங்களின் இந்த மனச் சஞ்சலங்கள் தோய்ந்த பேச்சுக்களைப் பல தடவை கேட்ட நேர்ஸ் ஒருவர் அறிமுகப்படுத்திய பெண்தான் லிசா. இரவு பகல் பாராது ஆராய்சசிகளையே தனது சுவாசமாகக் கொண்ட இளம் பெண்தான் லிசா. ஆராய்ச்சிக்கூடம்தான் அவரின் வீடு.. பல தடவை அவரிற்கேற்பட்ட தலைச்சுற்றுக்களை வேலைப்பழுவினால் என லிசா அலட்சியப்படுத்தியதன் விளைவு ஒரு இளம் விஞ்ஞானியின் மூளையிலேயே இரகசியமாக வேர்விட்டுத் தனது கிளைகளைப் பரப்பியிருந்தது Brain tumer என்ற மூளைக்கட்டி நோய்.

வைத்தியர்கள் அதைக் கண்டுபிடித்தபோது அது மிகவும் அபாயக்கட்டத்தில்த்தான் இருந்தது. சத்திரசிகிச்சை செய்யாவிடின் அவர் இறப்பது நிச்சயம். ஆனால் சத்திரசிகிச்சை வெற்றியளிக்கும் வாய்ப்பும் மிகக் குறைவானதே. வேறெந்த வழியுமற்ற நிலையில் லிசாவின் சத்திரசிகிச்சைக்கான நாள் குறிக்கப்பட்டது. அந்த நிலையிலும் உற்சாகத்துடன் இருந்த அப்பெண்ணை அங்குள்ள எல்லோரிற்குமே மிகவும் பிடித்துப்போனது. இரு துருவங்களாக விளங்கும் என்னையும் லிசாவையும் அறிமுகப்படுத்திய அந்த தாதிப்பெண் மனோதத்துவம் தெரிந்தவர்தான். விரைவிலேயே லிசாவின் உற்சாகம் என்னையும் அப்பாவையும் தொற்றிக்கொண்டது. அதுமட்டுமா? அந்தக் கலகலப்பு நிறைந்த பெண்மேல் காதல் வயப்பட்டேன் நான். எவ்வளவுதான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் இப்படியான நிலையில் மனம் அன்பிற்கு ஏங்கும் போலும். காதலைப் பற்றியே சிந்திக்க நேரமின்றி தனது ஆராய்ச்சிகளையே காதலித்தபடி இருந்த அப்பெண்ணும் அதே உணர்வுக்கு உள்ளானாள்.

லிசாவின் வாழ்வு இன்னும் சில நாட்களில் முடியக்கூடும் எனத் தெரிந்தும் எங்கள் இருவரின் காதலும் அவளின் மூளையிலிருந்த கட்டி போல, வளர்ந்துதான் வந்தது."

வெயில் தாழச் செல்ல லேசான குளிருடன் கூடிய காற்று எம்மைத் தழுவிச் சென்றபடி இருந்தது. எதுவும் பேசத் தோன்றாது மௌனம் மட்டுமே எங்கள் மொழியாய் டெனிஸின் முகத்தைப் பார்த்தபடி இருந்தோம்.

"எவ்வளவு எதிர்பாராத விடயங்கள் நடக்கிறது பாருங்கள். பெரிதாக ரிஸ்க் எதுவுமில்லை எனச் சொல்லி சத்திர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவிற்கு அந்த மேசையிலேயே heart attack வந்து மயக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் மிகவும் பயந்து விட்டார் என்றார்கள், வைத்தியர்கள் அவரின் இருதய இயக்கங்களை சரியாகக் கணிக்கவில்லை வழக்குப் போட்டு நஸ்டஈடு வாங்கு என்று சில நண்பர்கள் கூறினர். நான் எதுவுமே செய்யவில்லை. எனக்கு இறந்த அப்பாவை நினைத்து அழவா சாவின் விளிம்பில் நிற்கும் லிசாவை நினைத்துக் கலங்கவா எனப் புரியாமல் நான் தவித்த தவிப்பு இருக்கிறதே! டெனிஸின் உடல் ஒரு தடவை அதிர்ந்து குலுங்கியது.

"ஆனால் நடந்ததைக் கேளுங்கள். லிசா கட்டி அகற்றப்பட்டு உயிர் பிழைத்த அதிசயம் சில தினங்களில் நடந்தது. அதன் பின்பும் மூன்று மாதங்கள் வரை அவள் பல வைத்திய சாலைகளில் மாறி மாறி இருந்து முற்றாகக் குணமாகும் வரை எனது பொழுதுகளெல்லாம் அவளுடனேயே கழிந்தது. பின்னர் அவளும் நானும் ஒன்றாக வாழ ஆரம்பித்தோம்".

ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் கதையைச் சொல்லியபடி இருந்த டெனிஸ் தன்னைத் தானே உணர விரும்புபவர் போல எதுவும் பேசாது இருந்தார். பின்பு மெதுவாகக் கூறினார் "எங்கோ கோளாறு ஆரம்பமானது, லிசாவிற்கு உடலில் உரம் வந்ததும் அவளின் உயர உயரப் பறக்கும் வேகமும் மீண்டும் உயிர்த்தெழுந்தது. நான் அவளுக்கேற்ற துணை இல்லையோ என்ற எண்ணம் அடிக்கடி தோன்றியது. போதாததுக்கு எனக்குக் குழந்தையென்றால் கொள்ளைப் பிரியம். அவளோ குழந்தைகள் தனது முன்னேற்றத்துக்குத் தடை என நினைப்பவள். வெறுமையான வாழ்வைத் தொடர முடியாமல் நாங்கள் பிரிந்து விட்டோம். "ஆனாலும் ஒரு விதத்தில் நான் லிசாவிற்கு நன்றி கூற வேண்டும். எனது தந்தையின் மறைவால் அன்று நான் மனம் உடைந்து போகாமல் பேசிப் பேசி என்னை வலுவுள்ளவன் ஆக்கியது அவளின் அன்புதான் .

மேலே கரிய மேகங்கள் சூழத் தொடங்க களைத்துப்போன குழந்தைகளும் எம்மிடம் ஓடி வந்தனர். நன்றாக விளையாடிய திருப்தியுடனும் குளிர் பானங்களை எடுத்து ஒரே மூச்சில் குடித்தனர்.

கோடை காலச் சந்தோச தினங்கள் விரைவில் ஓடிப்போனது.

காலமும் எவருக்காகவும் காத்திருக்காமல் தன் கடமையைச் செய்தது. குளிர் மனிதரைப் பிடுங்கி எடுத்த ஒரு காலையில் பூனைக் குட்டிகள் போலப் போர்வைக்குள் சுருண்டிருந்த குழந்தைகளை எழுப்பி சந்திர மண்டலத்திற்குப் போவது போல வெளிக்கிடுத்த வேண்டும் என்ற எண்ணமே அலுப்பை ஏற்படுத்தியது. இனி ஒரு வாரத்திற்கு சாராவும் வரமாட்டா. நாளைக்கு மறுநாள் டெனிஸின் பிறந்த நாள் வருவதால் இன்று மதியமே தாயும் மகளுமாக அங்கே பயணப்பட இருந்தனர்.

நேற்றும் பின்னேரம் முழுவதும் வானமெனும் தலையணை பொத்துக்கொண்டது போல வெண் பஞ்சுகளாக பனி பூமியை வந்து முத்தமிட்டபடி இருந்தது. பஞ்சுப் பொதிகளாகக் குவிந்துகிடந்த முற்றத்துப் பனிகளையெல்லாம் கூட்டி அள்ளி snow man செய்கிறோமெனப் பிள்ளைகள் கொட்டமடித்தனர். அவரும் மூக்கில் கரட்டுடனும் தலையில் தொப்பியும் போட்டு கையில் ஒரு துடைப்பமும் வைத்தபடி கம்பீரமாகத்தான் இருந்தார். அதைப் பார்த்த பலரும் ஒரு நிமிடம் நின்று அவரை ரசித்துவிட்டுச் சிரிப்புக்களை உதிர்த்தபடி சென்றனர். கையில் ஒரு பரிசுப் பொருளுடன் வந்த ஒரு இளம் பெண் அப்பரிசை அவரின் பனி உடலிற்கும் துடைப்பத்திற்கும் இடையிற் செருகவே குழந்தைகளின் உற்சாகம் கரைபுரண்டது.

காலை நேரப் பரபரப்புடன் பம்பரமாகச் சுழன்றபோது தொலைபேசி அழைத்தது. நிரு அதை எடுத்துக் கதைத்துவிட்டு முதலில ஓடிப்போய் தனது தங்கையிடம் சொன்னான" சாரா இண்டைக்கு உன்னோட வாறாள் உனக்கு குளுக்(அதிஸ்டம்)"...... பின்பு " அம்மா உங்களைப் போகேக்கை வந்து சாராவைக் கூட்டிப் போகட்டாம்."

சாரா வீட்டிற்கு நாங்கள் போனபோது சாராவின் அம்மா சோபாவில் படுத்திருந்தவ மெதுவாகக் கூறினா, "எனக்கு நேற்று இரவிலிருந்து சரியான காய்ச்சலாக இருக்கிறது. இரவு வீட்டிற்கு வைத்தியர் வந்து பார்த்துவிட்டு இது ஒரு வித வைரஸால் ஏற்படும் கடும் காய்ச்சல் என்று மருந்து தந்தவர் " என்றா. காய்ச்சலால் சிவந்திருந்த முகத்தில் டெனிஸின் பிறந்த தினத்துக்கு அங்கு போக முடியாத கவலையும் சேர்ந்திருந்தது. பின்பு லிசா கூறினா "எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்வீர்களா..." எதுவானாலும் கூறுங்கள் என்று நான் கூறவே உள்ளே சென்று ஒரு பரிசுப் பார்சலை எடுத்து வந்தா. "லிஸா ஒவ்வொரு வருடமும் தவறாது வருவது போல இம்முறையும் வந்தவ. டெனிஸிடம் கொடுக்கும்படி அவ தந்த பரிசுப் பொருளை தவறாது உரிய நேரத்தில்ச் சேர்க்க வேண்டியது எனது கடமையல்லவா?" தயக்கமோ, தன்னிரக்கமோ, தனது செயலை உயர்த்திக் காட்டுவது போலவோ அன்றி ஒரு சாதாரண தொனியில்ச் சொன்னவர், டெனிஸிற்கான எங்களது பரிசையும் தருகிறேன்........ஒரு பார்சல் அனுப்பும் பெட்டி ஒன்றை வாங்கி அதனுள் வைத்து அனுப்பிவிடுகிறீர்களா? என்று கேட்டதுதான் தாமதம் தனது குட்டிக் கையால் அப்பாவிற்குப் பரிசளிக்கக் கீறிய ஒரு படத்தை சாரா ஓடிப் போய் எடுத்துக் கொண்டு வந்து தந்தா. எனக்கு நன்றி கூறியபடி லிசாவும் தயாராகக் கட்டி வைத்திருந்த பரிசுப் பொருளைத் தந்துவிட்டு பணத்தை எடுக்க உள்ளே சென்றா. மிக அழகாகக் கட்டப்பட்டிருந்த அந்த பரிசுப் பொருளின் மேல் எனது பார்வை சென்றது. இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்............. நேசத்துடன் லிசாரூ லிசா என எழுதப்பட்டிருந்தது. சட்டென்று என்னுள்ளே ஓரு விபரிக்க முடியாத உணர்ச்சிகளுடன் கூடிய அலை ஒன்று பொங்கிப் புரண்டது. நான் நிமிர்ந்து லிசாவைப் பார்த்தேன். லிசாவின் சுடர் விடும் அழகிய முகத்தில் சோர்வையும் மீறிய ஒரு இதமான சிரிப்புத் தவழ்ந்து கொண்டிருந்தது.

அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - தமிழின் வெளியீடான புலம் சஞ்சிகையில் கௌரி மகேஸ் அவர்களால் எழுதப்பட்ட சிறுகதை இது.

படைப்பு: கௌரி மகேஸ்

சொல்லாதே யாரும் கேட்டால்.........3

சொல்லாதே யாரும் கேட்டால்.........3
தலைவிதியை நொந்துகொண்டு வேலைக்குப் போனால் ........ வாசலிலை உவள் ஜெனி ஏதோ பேருக்கு போடவேணுமெண்டதுக்காக ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு அசத்தலாய் நிண்டாள். அட இண்டைக்குப் பொழுது வெய்யிலும் வெக்கையுமாக அந்தமாதிரித்தான் விடிஞ்சிருக்கு என்று புளுகமாக் கிடந்தது, உங்களுக்கும் உவள் ஜெனியைப் பற்றிச் சொல்லுறதுக்கு நிறையக் கிடக்கு ஆனால் இப்ப இல்லை, இதைவிட்டா இப்பிடியொரு சான்ஸ் இனிவராது. இவளோடையே வீட்டிலையிருந்தே கூட வந்தமாதிரி பந்தாவா கதைச்சுக்கொண்டு உள்ளை போனால் எனக்குக் கொஞ்சம் மவுசு ஏறும். அவளைப் பார்த்து ஜொள்ளு விடுகிற வெள்ளையனெல்லாம் ஏக்கமாப் பார்பானுகள் என்ற நினைப்பிலை.

ஹாய் ஜெனி குடன் மோர்கன் ( காலை வந்தனங்கள்) என்றன்.

மோர்கன் எல்லாம் கிடக்கட்டும் கொஞ்சம் நில்லு மேன் அம்பல், நானும் கொஞ்சநாளாப் பர்க்கிறன், வேலைக்கும் ஒழுங்கா வாறதில்லை. அந்தமாதிரிப் பூசிப்பிணத்திக் கொண்டு ஜாலியாத் திரியிறீர். கலரா எதாவது மாட்டீட்டுதோ? என்றாள் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு.

சும்மா வெறுப்பேத்தாதை. ஒருத்தியைக் கட்டிக்கொண்டு நான் படுகிறபாடு போதாதெண்டு உந்தச் சிலுப்பியளிட்டை வேற மாட்டினனெண்டால்..............

ரொம்பவும்தான் அலுத்துக்காதை, கிட்டவாயேன் அம்பல் ஒரு விசயம் சொல்லுறன்.

ம் சொல்லு

அவள் கிட்ட வந்து களுத்தைச் சுத்திக் கையைப் போட்டுக் கொண்டு இன்றைக்கு சாயங்காலம்............. என்று ஏதோ காதுக்கை கிசுகிசுக்கத் தொடங்கினாள்.

உள்ளுக்கை சற்றுக் குசியா இருந்தாலும்

சீ போ, ஆரும் பார்த்தால்................. என்று விலகப்பார்தன்.

அவளெண்டால், இப்ப என்னத்தைச் செய்துபோட்டன் என்று இந்த எகிறு எகிறுகிறாய், போனால் போகுது பாவமே என்று உனக்கு அந்த விசயத்தைச் சொல்ல வந்தால்....... சரிதான் போ உன்னை விட்டால் வேற ஆளே இல்லை என்று சிணுங்கினாள்.

அது வந்து............ இந்தக் கோலத்திலை எங்களைக் கண்டவன் எவனாவது என்ரை செல்லத்திட்டை போட்டுக் குடுத்திட்டானென்றால் பிறகு எனக்கு வீட்டிலை ஒருகிழமைக்குச் சோறு தண்ணி கிடையாது.............. அதுதான் என்று வழிஞ்சன்.

திரும்பக் கழுத்தைக் கட்டிக்கொண்டு இன்றைக்கு இரவு நானும் ............................. என்று கிசுகிசுத்தாள். எனக்கெண்டால் அவள் சொன்னதிலை பாதியைக் கேட்டதிலையே ............ மிச்சமெதுவும் காதிலை ஏறேல்லை.

சட்டென்று செல்லம் ரத்தக் காட்டேரியா கண்ணுக்கு முன்னாலை வந்து

உங்களுக்கு எப்படியப்பா இதுக்கு மனசு வந்தது என்று கழுத்தைப்பிடிச்சு உலுக்கத் தொடங்கினாள்.

இந்தக் காட்சியோட வந்த ஆசையெல்லாம் பொசுக்கெண்டு அடங்கி,

இல்லை ஜெனி இண்டைக்கு எனக்கு...................... என்று தொடங்க முதலே

வா மேன் இதைவிட முக்கியமான வேலை என்ன வந்திட்டிது. சாயங்காலம் பத்து மணிக்கெல்லாம் வீட்டை போயிடலாம்.

சரி சரி ஓகே. என்றிட்டன்.

அண்டைக்கு அதுக்குப் பிறகு நான் என்ன வேலை செய்தன் எப்பிடிச் செய்தன் என்று எனக்கே தெரியேல்லை எதோ காத்திலை பறக்கிற மாதிரி எல்லாத்தையும் முடிச்சுக் கொண்டு எப்படா சாயங்காலமாகும், எப்படா அங்கை போகலாம் என்று யோசிச்சுக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தன்.

சாயங்காலமாக, செல்லம்மா வேலை செய்யிற இடத்திலை ஒருநாளும் சொல்லாத ஒருத்தன் தன்ரை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறான், ஒரு நடை போட்டு வரவேணும்

ஆரும் ஜேர்மன்காரனோ? அவனுகள் இப்பிடி சுடுகிது மடியைப் பிடியெண்டமாதிரி கடைசி நேரத்திலை சோல்லமாட்டானுகளே. என்றாள் சந்தேகமாக

நானுமெண்டால் அது வந்து செல்லம் அவன் போன கிழமையே சொன்னவன் நான்தான் மறந்திட்டன். அவன் என்னோட நல்லமாதிரியப்பா, நல்ல உதவியும் அதுதான்.........

அது ஆரப்பா இத்தனை நாளா இல்லாமலுக்கு இப்ப புதுசா ஒருத்தன்.

உனக்கு எப்ப பார் ஒரே சந்தேகந்தான் என்று எரிஞ்சு விழவும் செல்லம்மா எதோ முணுமுணுத்துக்கொண்டு சமையல் கட்டுக்கை பூந்திட்டாள்.

நானும் அந்தமாதிரிக் குளிச்சு முழுகி கலியாணத்துக்கு வாங்கின கோட்டு சு10ட்டையும் எடுத்து மாட்டிக்கொண்டு பந்தாவா நடையைக் கட்டினன்.

ஒருமாதிரியா ஜெனி சொன்ன விலாசத்தைத் தேடிப் பிடிச்சுப் போய் அழைப்பு மணியை அடிச்சா, கதவு திறக்கக் காணம் நானும் விடாமலுக்கு விடாக்கண்டனாய் அடி அடியெண்டு அடிச்சும் ஆரும் திறக்காத ஆத்திரத்திலை கொஞ்சம் பலமாகவே கதவைத் தள்ளினால், மெல்லத்திறந்தது கதவு.

Jeny, Hai Jeny

வரச் சொல்லிட்டு எங்கதான் போய்த் தொலைஞ்சாளோ? என்று முணுமுணுத்தபடி உள்ளபோனால் ஆரையும் காணம் அப்படியே இன்னும் நாலு எட்டு எடுத்து வைக்க

உள்ளை கண்ட காட்சியிலை அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு ஐயோ செல்லம்மா என்று குளறினன்.



ஆக்கம்: அம்பலத்தார்

சொல்லாதே யாரும் கேட்டால்..........2

சொல்லாதே யாரும் கேட்டால்..........2
அதுக்கடையிலை ரெலிபோன் வேற கிணுகிணுக்கத் தொடங்கிச்சுது.

ஆரடா இது சிவபூசையுக்கை கரடி பூந்த மாதிரி ஏமசாமத்திலை என்று எரிச்சலாப் போனை எடுத்தால்.

Raskut speaking என்று பந்தாவாகவும் அதட்டலாகவும் தொலைபேசி உறுமியது.

குரலைக் கேட்ட உடனையே இந்த நேரங் கெட்ட நேரத்திலை ராசுக்குட்டியன் எடுக்கிறான் எண்டால் எதுவும் விவகாரமான விசயமாத்தான் இருக்குமெண்ட நினைப்பிலை எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு பேச்சே வரேல்லை. ரெலிபோனெண்டால்

ஓய் அம்பலம். அம்பலத்தார் என்ன பேச்சு மூச்சையே காணேல்லை என்று கரகரக்குது.

ஒருமாதிரியாச் சமாளிச்சுக்கொண்டு

என்ன ராசுக்குட்டியர் என்னவும் விசேசமே இந்த நேரத்திலை..............என்று முடிக்க முந்தியே

நீர் செய்யுறது உமக்கே நல்லா இருக்குதே கத்தவும்

நான் பயத்திலை சொல்ல வேணுமெண்டுதான் நினைச்சனான் பாரும், செல்லம்மாதான் அவசரப்பட்டு ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாமெண்டு............ என்று உளறத் தொடங்கவும்.

என்ன விசயத்தை போட்டு உடைக்கிறதெண்டு முடிவு எடுத்திட்டியளே என்று செல்லம்மா காதுக்கை சிடுசிடுக்கத்தாள்.

இதுகளையெல்லாம் கவனிக்காமல் அவனெண்டால் அங்கால

மனசில பாலகுமாரன், சுஜாதா என்ற நினைப்புப்போல....... என்று பொரிஞ்சு தள்ளினான்.

என்னடா இது ஒண்டுமாப் புரியேல்லை என்று நைசா விசயத்தை அவனிட்டையே கேட்டால்

எழுதுறதெண்டால் ஒழுங்கா எழுத வேணும். அவன் எழுதுறான் இவன் எழுதுறான் விட்டனோ பார் என்று கன்னாபின்னா என்று எழுதும் பிறகு முடிக்கத்தெரியாமல் கதையைப் பாதியிலை அம்போ என்று விட்டிடும் சனம் சிரிக்குது.

உப்பிடித்தான் வாணிவிழா மேடையிலை அம்பலத்தார் அது இது எண்டு ஒரு கதைவிட்டீர் பிறகென்னடா என்றால் கப்சிப் மிச்சக் கதையைக் காணம்.

அட உதே விசயம் நான் என்னவோ ஏதோ எண்டு பயந்தெல்லே போனன். அது வந்து............ அந்த விசயத்தைச் சொன்னனெண்டால் கன சிக்கல் பாரும் பிறகு நான் வீட்டிலை இருந்தபாடில்லை அதுதான்...........

என்ன கண்டறியாத சிக்கலோ?.

அதிலை என்னத்துக்குக் காணும் என்னையும் இழுத்தனீர்? சனங்களும் எத்தனை நாளைக்குத்தான் பொறுக்குங்கள் சலிச்சுப்போய் கடைசியிலை

என்ன ராசுக்குட்டியர் அம்பலத்தார் சொல்லுற மாதிரித் தெரியேல்லை. நீரெண்டாலும் மிச்சக்கதையைச் சொல்லுமன் அண்டைக்கு வாணிவிழா மேடையிலை நிண்டது ஆரப்பா? என்று கண்டவன் நிண்டவனெல்லாம் கேக்கத் தொடங்கிவிட்டாங்கள் தெருவிலை தலைகாட்டமுடியேல்லை.

இனிமேல் எதாவது கதை அது இதெண்டு என்ரை பேரை இழும் பிறகு தெரியும் ராசுக்குட்டியன் ஆரெண்டு என்று வெடிச்சுத் தள்ளிப்போட்டு டொக்கெண்டு போனை வச்சிட்டான்.

இந்தக் கதையளோட வந்த ஆசையெல்லாம் பொசுக்கெண்டு அடங்கிப்போய் இழுத்து மூடிக்கொண்டு பேசாமல் படுத்தால், அடுத்தபக்கத்தாலை

என்னப்பா அதுக்குள்ள படுத்திட்டியளே? செல்லம் செல்லம் என்று ஆசையா எதோ சொல்ல வந்தியள்..............என்றவும்

ஆசையோ மனுசன் படுற பாட்டுக்கை இப்ப அது ஒன்றுதான் குறைச்சல் என்று எரிஞ்சு விழுந்தன்.

அவளுமோ விடாமல் உங்கட ஆசையளுக்குக் குறுக்காலை நான் எப்பவாவது நின்றிருக்கிறனே என்று கொஞ்சலாகக் கிசுகிசுத்தாள்.

இதுபோதுமே பிறகென்ன ஐயா வழமைபோல வழியத் தொடங்கினன்...................

எனக்குத் தெரியும் இந்தமாதிரி விசயங்களைப் பார்த்தால் கனபேருக்குப் பொறுக்காது வயித்தெரிச்சல் தொடங்கிவிடும் என்று, ஆனாலும் அவையளோட எல்லாம் மல்லுப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறதுக்கு இப்ப எனக்கு நேரமும் இல்லை பொறுமையும் இல்லை. பிறகு வந்து கவனிச்சுக்கொள்ளுறன்.

ஆக்கம்: பொன்.அம்பலத்தார்

சொல்லாதே யாரும் கேட்டால்.........1

சொல்லாதே யாரும் கேட்டால்.........1


விழுந்திடிச்சு! விழுந்திடிச்சு!

செல்லம் ஏ! செல்லம்மா தண்டத்துக்கு வெட்டாதையுங்கோ! விழாது விழாது எண்டு கரிச்சுக் கொட்டினாய் இஞ்சை பார் ஐயாவுக்குப் பம்பரே விழுந்திட்டுது.

உங்கட புளுகு தெரியாதாக்கும் 10 ருபாக்கு வெட்டி 5 ருபா விழுந்தாலே ஊரைக் கூட்டுறனிங்கள்; இண்டைக்குப் 10க்கு வெட்டி 20 விழுந்திட்டுதாக்கும்.

சும்மா அலம்பாதை. இந்தக் கணத்திலை நீ ஒரு மில்லியனரின்ரை மனுசி ஆக்கும்..... என்று சொல்லவும் செல்லம்மாவும் அரை நம்பிக்கையோட

மெய்யாத்தான் சொல்லுறியளே அப்பா கண்ணாடியைப் போட்டு நம்பருகளை வடிவாப் பார்த்தளியளே ...................

இப்ப நீ எனக்கு 1 2 3 சொல்லித்தாறதைவிட்டிட்டு என்ரை முதலாளியாற்ரை போன் நம்பரை ஒருக்காத் தாருமப்பா முதல் வேலையா உந்தச் சனிப்பிடிச்ச வேலைக்கு ஒரு முழுக்குப் போட்டிட்டுத்தான் அடுத்த அலுவலைப் பார்க்கவேணும். மில்லியனையர் போய் உந்தக் கஞ்சப் பயலிட்டை வேலை செய்துகொண்டிருக்க வேணுமோ?

இப்பிடித்தான் நீங்கள் எப்பவும் அவசரப்பட்டு எல்லாத்தையும் போட்டு உடைச்சுப்போட்டு நிக்கிறனியள். விசயத்தை ஊருக்கெல்லாம் பறைதட்ட முந்தி இண்டைக்கெண்டாலும் நான் சொல்லுறதை ஒருக்காக் கேளுங்கோவன்.

இப்பவே நாங்கள் நல்லா உழைக்கிறம் நல்ல காசு வைச்சிருக்கிறம் எண்டு எங்கட சனங்கள் கதைச்சபடி.

அதுக்கென்னடியப்பா கடன்காரன் எண்டு திட்டாமல் வசதியா இருக்கிறமெண்டு கதைக்கிறது நல்லதுதானே.

ம்! நான் படுற பாடு எனக்கல்லோ தெரியும். ஐயா அவசரதேவை 2000 மாறேலுமே. அண்ணை ஒரு சின்ன உதவி தம்பி இடையில வந்து நிக்கிறான் ஏஜன்ருக்குக் கொடுக்க வேணும் 5000 தர ஏலுமே எண்டு அவனவன் கேக்க ஓமெண்டுபோட்டுப் பிறகு நீங்கள் ஒழிச்சுத் திரிய போன் எடுக்கிறவனுக்கெல்லாம் பதில் சொல்லுறது நான்தானே. போனகிழமை கூட உவர் ஜோ ஊரிலை தகப்பன் சுகமில்லாமல் ஆசுப்பத்திரியிலை கிடக்கிறார் 2000 கைமாத்தாத் தர ஏலுமே எண்டதுக்கு மறுக்கவும் ஏலாமல் கொடுக்கவும் ஏலாமல் பதுங்கித் திரிஞ்சதை அதுக்குள்ள மறந்து போனியளே? இப்ப லொத்தர் விழுந்த கதையை ஒண்டும் ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம். பேசாமல் வழக்கம்போல வேலைக்குப் போறது எங்கட பாடுகளைப் பார்க்கிறது எண்டு இருந்துகொண்டு எப்ப விழுந்தது எவ்வளவு விழுந்ததெண்டெல்லாம் சனங்களுக்குச் சொல்லவேணுமெண்டதை ஆறுதலாய் யோசிச்சுச் செய்வம் என்றாள்.

செல்லம்மா சொன்னதும் சரியாப்பட்டதிலை. விசயத்தை ஒருத்தருக்கும் சொல்லாமல் கப்சிப் என்று முடிச்சு 2மில்லியன் எங்கட கைக்கு வந்து 2 கிழமையுமாச்சு வேலைக்குப் போறதும் வாறதுமா காலம்போகு எனக்கெண்டால் கையிலை காசை வச்சுக்கொண்டு பிச்சைக்காரன்மாதிரி திரியிறதை நினைக்க நினைக்க கோவம் கோவமாத்தான் வந்திது கடைசியிலை பொறுக்க ஏலாமலுக்கு ஒரு நாள்

இஞ்சருமப்பா செல்லம் இப்ப சொல்லுவம் அப்ப சொல்லுவம் எண்டு சொல்லிச்சொல்லியே 1 மாசம் போட்டுது இப்பிடியே போனால் உவன் முதலாளிக்கு மாடா உழைச்சு நான் மண்டையைப் போட்ட பிறகுதான் விசயத்தை அவுத்துவிடுவீர்போலக் கிடக்கு இனியும் என்னாலை ஆசையை அடக்கிக்கொண்டு இருக்க ஏலாது எத்தனை நாளைக்குத்தான் 1000 ஈரோவுக்கு வாங்கின உந்த டச்சுக்காலத்து opel ஒட்டிக்கொண்டு திரியிறது. ஐஞ்சு காசுக்கு வழியில்லாதவன் எல்லாம் அங்க இங்க கடன்பட்டெண்டாலும் audi, BMW எண்டு ஆத்தலா ஓட்டிக்கொண்டு திரியிறான். இந்தக்கிழமை நான் ஒரு நல்ல கார் எண்டாலும் இறக்காமல் விடமாட்டன்.

நான் மட்டும் என்ன ஆ! ஊ! விலாசம் காட்டிக்கொண்டே திரியுறன். எவ்வளவு நாளா ஆசைப்பட்ட தீபம், ttn card கூட வாங்காமல்தானேயப்பா இருக்கிறன். என்ரை செல்லக் குஞ்செல்லோ பொறுத்ததுதான் பொறுத்தியள் இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கோ நல்லதொரு சந்தர்ப்பம் வரட்டும் அப்ப ஆசைப்பட்டபடி எல்லாம் செய்யலாம்.

இப்பிடிக் கதைச்சுக் கதைச்சுத்தானே அந்த நாளிலை என்னை மடக்கினனீர் என்னமோ சொல்லும் எனக்கெண்டால் ஒண்டும் நல்லதுக்காப் படவில்லை என்று திட்டிப்போட்டும் பயத்திலை அண்டைக்கும் கம்மெண்டு படுத்திட்டன்.

காலங்காத்தாலை எழுப்பி வழமைபோல சாப்பாட்டு பொட்டலத்தையும் தந்து அனுப்பிவிட்டாள் பாவி நானும் வெட்டக்கொண்டு போற ஆடு மாதிரி மலங்க மலங்க முழிச்சுக்கொண்டு வேலைக்குப் போனன். கொஞ்ச நேரத்தாலை

அம்மா அம்மா அங்கை பாருங்கோ அப்பா வாறவடிவை.

என்னடி சொல்லுறாய் இப்ப கொஞ்சத்துக்கு முந்தித்தானே வேலைக்குப் போனவர். அதுக்குள்ளை வாறாரோ? வடிவாப்பாரடி வாறது ஆரெண்டு.

எனக்கு அப்பாவைத் தெரியாதே?

ஒரு தேவைக்குக் கூட லீவு எடுக்காத மனுசன் வேலை செய்ய ஏலாமல் கெதியிலை திரும்பி வருகுது எண்டால் என்ரை கடவுளே என்ன வருத்தமோ? போடி போய் அப்பாவைக் கவனமாப் பிடிச்சுக் கூட்டிக்கொண்டு வா.

சும்மா போங்கோ அம்மா. அப்பா கடைக்குப் போட்டுக் கை நிறையப் பையளோட வாறார் நீங்கள் என்னவோ சொல்லிக்கொண்டு நிக்கிறியள். அப்பா! எனக்கு என்ன வேண்டியந்தனிங்கள்.

பொறு பொறு வீட்டுக்கை வரமுந்தியே உந்தப் பறப்புப் பறக்காதை உள்ளை வரவிடு. ஒண்டில்லை நிறைய வாங்கியந்திருக்கிறன்.

என்ரை பப்பி எண்டால் பப்பிதான். எண்டுகொண்டு சின்னவள் என்ரை தோளிலை பாஞ்சு கட்டிப் பிடிச்சதையும் கவனிக்காமல் மெதுவா செல்லாம்மாவை நோட்டம்விடலாம் எண்டு சைட்டாலை பாத்தால் அனலடிக்கிற கண்ணோட வெடிக்கத்தயாராக நிக்கிறாள் எனக்கெண்டால் பயத்திலை கையும் ஓடேல்லை காலும் ஓடேல்லை வழமைபோல உளறத்தொடங்கினன்.

செல்லம் உப்பிடி முறைக்காதையுமப்பா நான் காலமை வேலைக்கெண்டுதான் போனனான். வழியிலை காருக்கை கொஞ்சம் தலையிடிக்குமாப்போல கிடந்தது அதுதான் செப்பனக்கு கிறங்கெண்டு அடிச்சுச் சொல்லிப்போட்டு (முதலாளிக்கு சுகயீனம் என்று தொலைபேசிவிட்டு) திரும்பி வரேக்கதான் அண்டைக்கு நீர் ஆதவா ஆசியா சென்டரிலை பச்சைக்கலர் சீலையொண்டைப் பாத்து ஆசைப்பட்டது ஞாபகத்துக்கு வந்தது போறதுதான் போறன் அதையும் வாங்கிக்கொண்டு வீட்டைபோவம் எண்டு அங்கைபோனால் ttn காரங்கள் அதிர்ஸ்டலாபச் சீட்டொண்டு நடத்திக்கொண்டு இருந்தாங்கள். போனால் போகுதெண்டு சீட்டொண்டு வாங்கினால் பாருமப்பா ஒரு வருச ttn சந்தா அட்டையும் 5000 ஈரோ காசுமெல்லையப்பா விழுந்திட்டுது. அதுதான் இதுகளும் பெடியளுக்கு ஆளுக்கொரு சைக்கிளும் ........................ என்று வசனத்தை முடிக்க முந்தியே செல்லம்மா கோபமும் நக்கலுமா

காட்டுற பந்தாவுகளைப் பார்த்தால் லொத்தரிலை மில்லியன் விழுந்திட்டுதெண்டைல்லோ நினைச்சன் என்று வெடிக்கத் தொடங்கினாள். இதுக்கிடையிலை நல்லகாலத்துக்குச் சைக்கிள் எண்ட சொல்லைக் கேட்ட சின்னவள் அண்ணா அப்பா எங்களுக்குப் புதுச் சைக்கிள் வாங்கியந்திருக்கிறார் எண்டு கத்திக்கொண்டு வாசலுக்கு ஓடினாள். நானெண்டால் செல்லம்மாவை எப்பிடி வழிக்குக் கொண்டு வாறதெண்டு புரியாமல்

சீ சீ எங்களுக்கு எப்ப எண்டாலும் அப்பிடி நடந்திருக்கே. காரிலை போகேக்கைதானப்பா அந்த யோசனை வந்தது ஒரேயடியா மில்லியன் விழுந்தது எண்டு சொல்லாமல் அப்பப்ப அதிலை 5000 விழுந்தது இதிலை 10000 விழுந்தது அதிலைதான் அதை வாங்கினம் இதை வாங்கினம் எண்டு சொல்லுவம் எண்டு பார்த்தன் அதுதான் இண்டைக்கு.....................

பொய்யைச் சொல்லுறதெண்டாலும் பொருந்தச் சொல்ல வேணும் ttn காரங்கள் முதல் பரிசா ஒரு பாட்டு CD கொடுத்தவங்களெண்டாலே ஒருத்தனும் நம்பமாட்டாங்கள். நீங்கள் என்னடா என்றால்.................

சரி சரி இதுக்குப்போய் உந்த எகிறு எகிறாமல் இந்த ளுயசநந வடிவா இருக்கோ எண்டுபாருமன் என்று சொல்லவும்

கெட்ட கேட்டுக்கு சாறி வேற எண்டுகொண்டு திரும்பினவள் கையிலை கிடந்த சாறியைக் கண்டிட்டு

என்னண்டப்பா எனக்கு இது பிடிக்குமெண்டு கண்டுபிடிச்சனிங்கள்? எவ்வளவோ நாளா இந்தக் கலரிலை சீலையொண்டு வாங்கவேணுமெண்டு திரிஞ்சனான். நல்ல வடிவா இருக்கப்பா சனிக்கிழமை சிங்கத்தார் வீட்டு அந்திரட்டிக்கு இதைக் கட்டிக்கொண்டு வரட்டே?

வரவர என்னத்துக்கு எதைக் கட்டுறதெண்டு விவஸ்தையே இல்லாமல்போச்சு. அந்திரட்டிக்குப்போய் இந்தப் பட்டுச் சீலையை எவனாவது கட்டுவானே.

இப்ப கிட்டத்திலை வேற ஒரு விசேடமும் வரேல்லை. இப்பிடிப்பார்த்தால் எப்பதான் எனக்குப் பிடிச்ச இந்த மயில் நீலப்பட்டைக் கட்டுறது.

அட ஒரு சிலையிலை இவ்வளவு விசயம் இருக்கெண்டு இவ்வளவு நாளாத் தெரியாமல் போட்டுது வலு கெதியாச் சூடு தணியுது எதுக்கு வம்பெண்டு நினைச்சுக் கொண்டு

நீர் எந்த நிகழ்ச்சிக்கு எந்தச் சேலையைக் கட்டினாலும் அதிலை ஒரு தனி வடிவுதானப்பா அந்திரட்டிக்கு உதையே கட்டும் என்று கதையைச் சட்டென்று முடிச்சுக்கொண்டு பெடியளிட்டை வாசலுக்கு நழுவினன்.

அன்று இரவு

செல்லம் என்ன இப்பத்தான் படுத்தனீர் அதுக்குள்ள நித்திரையே என்று காதுக்கை கிசுகிசுத்தன்.

வயசு போனாலும் உந்த ஆசையளுக்கெல்லாம் குறைச்சலே இல்லை. இப்பத்தான் பெடியளும் படுக்கப்போனதுகள் அதுக்குள்ள அவசரப்படாமல் பேசாமல் படுங்கோ என்று சிடுசிடுத்தாள் என்ரை செல்லம்மா.

கதையைப் படிக்கிறதைவிட்டிட்டு படுக்கையறையிலை நாங்கள் கிசுகிசுக்கிறதை ஒட்டுக் கேக்காமல் நீங்களும் அவரவர் வீட்டுக்குப்போய் பேசாமல் படுங்கா மிச்சத்தைப் பிறகு சொல்லுறன்.


ஆக்கம்: பொன்.அம்பலத்தார்

கொம்பியூட்டர் விற்பனைக்கு !

கொம்பியூட்டர் விற்பனைக்கு !

இது கொஞ்சம் விவகாரமான விசயம்தான் ஆனாலும் நாலு பேருக்கெண்டாலும் சொல்லாட்டில் தலையே வெடிச்சிடும் போலக்கிடக்கு அதுதான் சொல்லவாறன்.

என்ரை அவகொஞ்ச நாளா இஞ்சாருங்கோ எங்களுக்கு முந்தி வந்ததுகளெல்லாம் சொந்தவீடு, சிட்டிசன்சிப் எண்டு ஒரு பந்தாவோட இருக்குதுகள். முந்தநாள் வந்ததுகள்கூட இன்ரநெற், ஈமெயில் எண்டு பீத்திக்கொண்டு திரியுதுகள். ஒரு சபை சந்திக்குப்போனால் எனக்குச் சொல்லுறதுக்கு ஒரு விசயம்கூட இல்லாமல் வெக்கமாக்கிடக்கப்பா, இப்படியே போனால் ஒரு சனமும் எங்களை மதியாதுகள். புதுசா ஒரு கொம்பியூட்டர் வகுப்புத் தொடங்குதாம், நீங்கள் அதுக்கெண்டாலும் போங்கோ அப்பதான் நாங்களும் கொஞ்சம் தலை நிமிரலாம் எண்டு ஒரே ஆக்கினை. எனக்கும் விசயம் நல்லாத்தான் தெரிஞ்சுது. எண்டாலும் ஒரு சின்னப்பயம், நானும் கடைசியிலை நீர் சொல்லுறதும் நல்லாத்தான் கிடக்கு, ஆனாலும் எனக்கு இந்த வயசிலை தனியப்போக வெக்கமாக்கிடக்கப்பா நீரும் வாறதென்றால் சொல்லும் இரண்டுபேருமாகப் போவம் எண்டன்.

ஒருவழியா அல்டியிலையிலை அங்கபோட(மலிவு விற்பனை) போட்டிருக்கிறானெண்டு அறிஞ்சு ஓடிப்போய் ஒரு கொம்பியூட்டரையும் வாங்கிக்கொண்டுவந்து வரவேற்பறையிலை வாறவையளுக்கெல்லாம் வடிவாத் தெரியிறமாதிரி சோக்கேசுக்குப் பக்கத்திலை வச்சுப்போட்டு வகுப்புக்கும் போகத் தொடங்கினம். பிறகென்ன வீட்டிலை எனக்கும் அவவுக்கும் கதைச்சுமாளாது. நித்திரையிலை திடுக்கிட்டு எழும்பி இஞ்சருமப்பா இவள் சின்னவளின்ரை அடுத்த பிறந்தநாளுக்கு அவளின்ரை படமெல்லாம்போட்டு அந்தமாதிரி ஒரு காட் அடிக்கிறன். அதோட பாருமன் சனமெல்லாம் என்ன கதைக்குதுகள் எண்டு சொல்லி வாய்மூடமுந்தியே மனுசி உங்களுக்கு உதைச்சொல்லுறதுக்கு இந்த நடுச்சாமந்தான் கிடைச்சுதே என்று எரிஞ்சு விழுந்தாலும் பிறகு நானும் கொஞ்ச நாளாப் பாக்கிறன் நித்திரையிலையும் இன்ரநெற், சற் எண்டு எல்லாம் பிசத்திறியள், ஒரேயடியாப் படியாதையுங்கோப்பா எனக்கெண்டால் பயமாக்கிடக்கு எண்டா.

எனக்கெண்டால் வாத்தி கெதியில ஈமெயில், மற்றது கொம்பியூட்டருக்காலை கதைக்கிறதுகளை படிப்பிச்சுப்போட்டுதென்றால் தபால் செலவு, ரெலிபோன் காசெல்லாம் சரியான மிச்சம்தானென்று ஒரே புளுகந்தான்.

ஆனாலும் நாள்ப் போகப்போக வாத்தி என்னடா என்றால் வைனறி சிஸ்டம், டொஸ், கியூபேசிக், காட்வெயார், சொப்ற்வெயார் என்று என்ரை கொம்பியூட்டரிலை இல்லாத விசயங்களா ஏதோ கதையளந்து கொண்டு போகுதே தவிர எப்பத்தான் எங்களுக்குத் தெரிஞ்ச விசயங்களைச் சொல்லித்தரப்போகுதோஎண்டு எனக்கு ஓரே சந்தேகந்தான் !

பொறுக்கேலாமல் கடைசியிலை வெள்ளையும் சொள்ளையுமாக வந்திருக்கிற, வகுப்பிலை அடிக்கடி வாத்தி கேக்கிற கேள்விகளுக்கு டக்,டக் எண்டு பதில் சொல்லுற சின்னவனை எனக்குப் பக்கத்திலை கூப்பிட்டிருத்தி எடதம்பி உந்தாள் எப்படா படமடிக்கவும், ஈமெயில் எழுதவும் சொல்லித்தரும் எண்டு கேட்டன். அண்ணை உங்களுக்கு விசயம்தெரியாதே உந்தாள் இருவது,முப்பது வருசத்துக்கு முந்திப் படிச்சவர், அப்ப எல்லாம் விண்டோஸ், ஈமெயில் எல்லாம் வரேல்லை, அதாலை அவருக்கு அவ்வளவாத் தெரியாது, அதுதான் அந்தாள் உதுகளைப் படிப்பிக்குதில்லை.... எங்களைப்போல ஆக்கள் கேள்வி கேட்டு மடக்கிப் போடுவம் எண்டு பயம் எனக்கும் பெடியன் சொல்லுறது சரிபோலத்தான் கிடந்துது. சும்மா சொல்லக்கூடாது உவன் முந்தியொருநாள் சொன்னவன் தானாகவே கண்டுபிடிச்சு பாட்டெல்லாம் டவுண்லோட் பண்ணிக் கேக்கிறனான் என்று, அவன் சொன்னால் சரியாத்தான் இருக்கும்.

ஒருவிசயத்தைச் சொல்ல மறந்து போனன். எங்கடைவகுப்பிலை ஒரு சின்னப் பொடிச்சியும் படிச்சவள். அவள் டஸ், புஸ் எண்டு வாத்தியை இங்கிலீசிலையெல்லாம் கேள்வி கேக்கிறவள். அவள் இங்கை ஒரளவு சின்னவயசிலை வந்து கொஞ்சக்காலம் டொச்சுப் பள்ளிக்கூடத்திலையும் படிச்சதிலை நாங்கள் ஏதாவது கேட்டாலும் சட்டுப்புட்டெண்டு டொச்சிலைதான் பதில் சொல்லுறவள். இதுகளாலை அவளோட கதைக்கிறதெண்டால் எனக்கு சரியான பயம். அவள் ஒருநாள் சின்னவனிட்டை எனக்கு ஒரு டவுட் சொல்லித்தாறியளோ? என்றாள். சின்னவனெண்டால் முகமெல்லாம் பல்லாக ஏனில்லை? எண்டு கேட்டுப்போட்டு எங்களையெல்லாம் விலாசமாத் திரும்பிப்பாத்தான்.

பொடிச்சி, நான் இங்க போனமுறை மாஸ்டர் கொம்பியூட்டரிலை சொல்லித்தந்த விசயத்தை வீட்டிலை போய் வடிவாச்செய்து பாப்பமெண்டு என்ர டடி எனக்கெண்டு புதுசா வாங்கின கொம்பியூட்டரிலை செய்து பாத்தால் அந்த விசயமொண்டும் எங்கட கொம்பியூட்டரிலை வரமாட்டனெண்டுது, அதில எல்லா புது புறோகிறாமும் இருக்கு..... அப்பிடி இருந்தும் இது வருதில்லை, அதுதான் எனக்கு ஏனெண்டு விளங்கமாட்டுதாம். எண்டாள்.

நீங்கள் கொம்பியூட்டரிலை டிஸ்கற்றைப் போட்டனிங்களே எண்டு சின்னவன் கேக்க ஓமோம் அதெல்லாம் புதுசா வாங்கி வைத்திருக்கிறன் எண்டாள்.

நீங்கள் புது டிஸ்கற்றைப்போடுறது சரி சிஸ்டர் ஆனால் இங்கை வேலை செய்யேக்கை பாவிச்ச டிஸ்கற்றை உங்கட வீட்டுக் கொம்பியூட்டரிலை போட்டனிங்களோ எண்டான். பொடிச்சி முழியை உருட்டினாள். அவளதைப் போடல்லைப் போல கிடக்கு. சின்னவனுக்குத் தான் சிக்கலைக் கண்டுபிடிச்சதில ஒரே பெருமை. அதைப் போட்டால்தானே சிஸ்டர் இஞ்ச நீங்கள் மெமரி பண்ணின விசயம் உங்கட கொம்பியூட்டரிலை வரும் எண்டு கர்மசிரத்தையாக விளங்கப்படுத்தினான் பொடியன். அப்பத்தான் எனக்கும் உப்பிடியும் ஒரு விசயம் இருக்கே எண்டு விளங்கினாலும், பொடிச்சி இப்படி ஒரேயடியாக் கவிண்டதிலை நல்ல சந்தோசம். சிலுக்குமாதிரி மினுக்கிக்கொண்டு திரிஞ்சவவுக்கு நல்லா வேணும் எண்டு நினைச்சுக் கொண்டன்.

வகுப்பிலை நடந்ததுகளைச் சொல்லுறதெண்டால் விடிய விடியச் சொல்லலாம். இப்பிடித்தான் ஒருத்தர் லுப்ஸ்தானா பைலட் போல கோட்டு சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு பிறீப்கேஸ் எல்லாம் கொண்டு வாறவர். வாத்தி படிப்பிக்கத் தொடங்கினதும் கடகட எண்டு அங்காலை இங்காலை திரும்பாமல் ஏதோ எழுதிக்கொண்டே இருப்பார். எனக்கெண்டால் அண்ணை நீங்கள் எந்த பிளேனுக்கு பைலட் எண்டு கேக்கத்தான் விருப்பம். ஆனாலும் எந்தப் புத்திலை எந்தப்பாம்பு இருக்குமோ எண்டு பயம். அவர் ஒருநாள் சின்னவனைப் பார்த்து கலோ பிறதர் நான் கனநாளா ரீ - ஒன்லைன் எடுத்து வச்சிருக்கிறன் ஆனாலும் ஈ மெயில் அட்றஸ் இல்லாததிலை ஒருதருக்கும் ஒரு லெட்டர் கூட எழுத ஏலாமல் கிடக்கு, நீரெப்படி அட்ரஸ் எடுத்தனீரென்று சொல்லினீரெண்டால் நல்லது என்று சின்னவனைக் கேட்டார். அவன் டக்கென்று nadaraja@t-online.de எண்டு உங்கடபேர்தான் உங்கட விலாசமா இருக்கும் அண்ணை எண்டான்.

அது எப்படி பிறதர் அப்பிடிக் குடுக்கச்சொல்லி நான் அவங்களுக்குச் சொல்லாமல் ............ எண்டு இழுத்தார்.

எல்லாருக்கும் அப்படித்தானண்ணை முதல்லை அவை அவையிண்டை பேரைத்தான் குடுப்பினம், பிறகு தாங்கள் தாங்கள் விரும்பினபடி மாத்தலாம். எண்டதைக் கேட்க எங்கடை வீட்டிலைமட்டுமில்லை எல்லா வீட்டிலையும் கதை உப்பிடித்தான் போகுது எண்டு எனக்கு ஒரு ஆறுதல்.

இதுக்கிடையிலை சின்னவளின்ரை பிறந்தநாளும் கிட்டவந்துட்டுது. எனக்கென்றால் காட் அடிக்கேலாமல் போடுமோ எண்டு ஒரே கவலை !

இவரை விட்டா சரிவர மாட்டாரப்பா...கேளுங்கோ எண்டு மனுசியும் ஒரே பேச்சு ! அடுத்த வகுப்பில வாத்தி வந்து எக்செல் எண்டு தொடங்க பொறுங்கோ மாஸ்டர், நீங்கள் எப்ப எங்களுக்கு காட் அடிக்க, பிறின்ற் அடிக்க எல்லாம் சொல்லித்தரப்போறியள் எண்டன் நான். அந்த ஆள் என்னடா என்றால் உதுகளைப் படிக்கிறதுக்கென்றால் என்னட்டை வராதையுங்கோ பக்கத்து வீட்டுப் பொடியளைக் கேளுங்கோ. எண்டு சொல்ல எல்லாரும் சிரிக்க எனக்கெண்டால் நடுரோட்டிலை வேட்டி அவிண்டதுபோல ஒரே வெக்கமாப்போச்சு.

அடுத்த வகுப்பிலை சின்னவனைக் கேட்டன் எட தம்பி உந்தப்பெட்டியை ரைப்றைட்டர் போல எண்டாலும் பாவிக்கலாமென்றால் என்ரை பெட்டியுக்கை எங்கை பேப்பரைப் போட்டு எப்படி அடிக்கிறதெண்டே தெரியேல்லையடா ...... சோதனையும் கிட்டவந்திட்டுது ஒரு நாளைக்கு என்ர வீட்டை வந்து உதுகளையெல்லாம் வடிவா ஒருக்கால் சொல்லித் தாடா மேனை. பிறகு உந்தாள் கொம்பியூட்டரிலை விடையளை எழுதிப் பிறின்ட் அடிச்சுத்தாங்கோ எண்டு சொல்லி ஒரேயடியாக் கவுத்தாலும் கவுத்துவிட்டிடும், அதோட எனக்குப் பாடங்களிலையும் கனக்க டவுட் கிடக்கு ஒருநாளைக்கு வந்தாயெண்டால் எல்லாத்தையும் ஒரேயடியா முடிச்சிடலாம் எண்டன்.

அவனென்றால் எனக்கண்ணை நேரங்கள்தான் கொஞ்சம் பிரச்சனை என்று பிசகு பண்ணினாலும் ஒருவழியா சனிக்கிழமை வாறன் என்றான். விசயத்தைக் கேட்ட மனுசிக்கெண்டால் புளுகந்தாங்கேல்லை நாங்களப்பா பிழை விட்டிட்டம், முந்தியே வாத்திக்குத் தண்டத்துக்கு காசு குடுக்காமல் இவன் பெடியனைக் கேட்டே அலுவலை முடிச்சிருக்கலாம்.

பாவம் பொடி வீடு தேடி வருகுது, நீங்கள் சனிக்கிழமைக்கு ஒரு உடன் ஆட்டிறைச்சிப் பங்குக்குச் சொல்லுங்கோ, தனிய இருக்கிற பொடியனப்பா.....வாய்க்கு ருசியா நல்ல ஒரு பிரியாணி போட்டுக் குடுத்தால்தான் எனக்குத் திருப்தி எண்டா. சனிக்கிழமை காலமையிலயிருந்து எனக்கும் மனுசிக்குமெண்டால் கையும் ஓடேல்லை காலும் ஓடேல்லை. ஒருவழியாச் சின்னவனும் வந்து சேர்ந்தான். வந்ததும் அண்ணை இண்டைக்கு நான் கொஞ்சம் கெதியா வேலைக்குப் போகணும், வேலை செய்யிற இடத்தில 2 பேர் சுகயீன லீவு நீங்கள் கெதியா உங்கட டவுட்டுகளைக் கேட்டியள் என்றால் விசயத்தை முடிச்சிட்டு நான் கிளம்பிடுவன் என்றான். எனக்கெண்டால் கடைசியிலை இண்டைக்கும் விசயம் கோவிந்தா தானோ எண்டு அழுகையே வந்திடும்போலக் கிடந்துது, எண்டாலும் சமாளிச்சுக்கொண்டு தம்பி அப்படியென்றால் பாட விசயங்களைப் பிறகு பாப்பம், முதல்லை காட் அடிக்கிறதைக் காட்டும் எண்டன்.

அவனெண்டால் சரியண்ணை படம் போட்டுக் காட் அடிக்கிறதெண்டால் உங்கடை ஸ்கானர், பிரிணடர் எல்லாம் நல்லா இருக்கவேணும் அப்பத்தான் காட் வடிவா வரும் எண்டு சொல்லிக்கொண்டு கொம்பியூட்டருக்குக் கிட்டப் போட்டு அண்ணை ஸ்கானரையும், பிரிண்டரையும் எங்கைவச்சிருக்கிறியள் எண்டான். எனக்கெண்டால் ஒண்டுமே விளங்கேல்லை உதிலைதானேயடா தம்பி எல்லாம் கிடக்கு எண்டன். அண்ணை அப்ப நீங்கள் ஸ்கானர், பிரிணடர் இரண்டும் வாங்கேல்லையோ எண்டான்.

என்னடா தம்பி அல்டிக்காரன் இப்பிடியும் ஏமாத்துவானோ பெட்டியிலை கொம்பிளீற்றா எல்லாம் கிடக்கெண்டான் எண்டா என்ர மனுசி.

அப்பிடியில்லை அக்கா பொதுவா உதுகளை நாங்கள் தனியா வேண்டிப் பூட்டவேணும் எண்டு பொடியன் சொல்ல கேட்டீங்களே விசயத்தை வாத்தி எங்களுக்கு உதுகள் ஒண்டையும் சொல்லித்தரேல்லை தம்பி டக்கெண்டு எப்படிக் கண்டுபிடிச்சிட்டுது. எண்டு மனுசி சொல்லிக்கொண்டு உள்ள போய் பிரியாணிக் கோப்பையோட வந்தா. எனக்கு சின்னவளுக்கு பிறந்தநாள் காட் அடிக்க ஏலாது எண்டு விளங்கியிட்டுது. அண்டைக்கு அதுக்குப்பிறகு நடந்ததுகள் எதுவுமே மூளைக்கை ஏறேல்லை.

இதுக்கிடையில கொஞ்சம் கொஞ்சமா என்ரை மூத்தவன் பக்கத்துவீட்டுப் பொடியளையெல்லாம் கூட்டிக் கொண்டுவந்து ஏதோ எல்லாம் செய்து கொம்பியூட்டரிலை கார் ஓட்டத் தொடங்கிவிட்டான். அவன் அதிலை போர்மிலா 1 காரை அடிபடாமல் லாவகமாக ஓடுறதைப் பாக்க எனக்கெண்டால் திரும்ப ஒரே சந்தோசம். எனக்கல்லோ தெரியும் நான் இங்க கார் ஓட்டப் பழகேக்கை பட்ட கஸ்டங்கள்.

இதுக்கிடையிலை மனிசி ஒருகுண்டைத் தூக்கிப்போட்டுது. இன்னும் 3 மாதத்திலை சோதினையும் வரப்போகுது, உந்தாள் இசகுபிசகான கேள்விகளைப்போட்டு பெயில் விட்டால் பிறகு சொல்லி வேலையில்லை! நான் இப்பவே வகுப்பைவிடப்போறன் என்று. நானெண்டால் ஒரு முடிவுகாணாமல் விடுறதில்லை எண்டு போய்க்கொண்டிருந்தன்.

என்ரை மகனெண்டால் பள்ளிக்கூடத்தால வந்தால் முந்தினபோல வெளியில விளையாட ஓடாமல் ஒரேயடியாக் கொம்பியூட்டரில இருந்து ஏதேதோ செய்தபடி.

எனக்குத்தான் இழவு இதொண்டும் விளங்காட்டிலும் அவனாவது நல்லா கொம்பியூட்டரைப் படிச்சு முன்னுக்கு வந்திடுவானெண்டு எனக்குச் சந்தோசம். நெடுக இப்படி கொம்பியூட்டருக்கை இருந்து கஸ்டப்பட்டுப் படிக்கிறான் எண்டு மனுசியும் முட்டைக்கோப்பி, சத்துமா எண்டு செய்துகொடுத்து மகனைப் பராமரிச்சபடி. சரி உவன்ரை கெட்டித்தனத்துக்கு உவனையெண்டாலும் ஒரு நல்ல கொம்பியூட்டர் வாத்தியிட்டை சேர்த்துவிடுவமெண்டு புதுசா ஒரு மாஸ்டரைத் தேடிக்கோண்டிருந்தன்.

அப்பத்தான் ஒருகிழமையா லீவிலை வீட்டை வந்து நிண்டான் என்ர மருமகன். அவன் ஓருநாள் மெதுவா மாமா நான் ஒருவிசயம் சொல்லுறன் கோவிக்கமாட்டியளோ எண்டு பெரிய பீடிகையெல்லாம் போட்டான். நானேதோ மருமகன் ஆரையோ காதலிக்கிறான் போல, அதுதானே இப்ப பொடியள் வழக்கமாச் செய்யிறது, அதைச்சொல்லத்தான் தயங்கிறான்... எண்டு நினைச்சு, எதெண்டாலும் தயங்காமச் சொல்லடா மேனை, நானுண்ட மாமா அல்லோ எண்டன். அவன் மாமா உவன் உங்கடை மூத்தவனை ஏன் ஒரேயடியா வீடியோ கேம் விளையாட விட்டுக் கெடுக்கிறியள்? நான் புத்தி சொன்னால் அவன் அப்பாதான் நல்லா கொம்பியூட்டரில இரடா எண்டு விட்டவர் எண்டு சொல்றான், உப்பிடியே இவன் உதுக்கு அடிமையாகிப் படிப்பில கோட்டைவிடப்போறான்.....எண்டு ஏதேதோ சொல்லிக்கொண்டே போனான். அப்பத்தான் எனக்கு ஓடி வெளிச்சுது தம்பியாண்டான் கொம்பியூட்டரிலை இருந்து நெடுகச் செய்ததொண்டும் பிரயோசனமான விசயமொண்டுமில்லை எண்டது!! என எனக்கு வந்த விசரிலை கொம்பியூட்டரைக் கழட்டிப் பழையபடி பெட்டியிலை போட்டு மூடி வச்சிட்டு கொம்பியூட்டர் விற்பனைக்கு உண்டு எண்டு பேப்பரிலை விளம்பரத்தையும் போட்டிட்டு எவன்ரை தலையிலை உந்தப் பெட்டியைக் கட்டலாமெண்டு இப்ப கொஞ்ச நாளாப் பாத்துக் கொண்டிருக்கிறன்.

ஆக்கம்: பொன். அம்பலத்தார்

ரெபேக்கா வீட்டுக்கு நான் போகிறேன

ரெபேக்கா வீட்டுக்கு நான் போகிறேன்

அது ஒரு கோடை மாலைவேளை. மார்க் மிகுந்த முகவாட்டத்துடன் எங்கோ வெறித்தபடி அவர்கள் வீட்டுத்தோட்டத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். பல மணிநேரங்களாக அவர் அப்படியேதான் இருந்தார்.

அவர் வேலைசெய்த தொழிற்சாலையில் ஆட்குறைப்புச் செய்தபின்பு வேலை இழந்தோருக்கான உதவிப்பணத்தைப்பெற்றுக்கொண்டு புதிய வேலைக்கு மார்க் முயற்சிப்பதை நாமறிவோம். எப்போதுமே அவர் முகத்தில் குறும்பும் புன்சிரிப்பும் கொப்பளிக்கும். அவரின் மனைவி ரெபேக்காவும் ஒர் இனிய பெண்தான். அவ வேலைக்குப் போனபின்பு மார்க் தனது தோட்டத்தில் மிகவும் உற்சாகமாக வேலைசெய்தபடி காணப்படுவார். அப்படி இல்லாவிடின் வீட்டுத்திருத்தவேலை, குளிர்காலத் தேவைக்காக மரக்குத்திகளை வெட்டுவது என ஏதாவது செய்தபடி இருப்பவர், இப்படி அவர் இருப்பதைப்பார்க்க எமக்கு ஆச்சரியமாக இருந்தது.

இங்கு வந்த புதிதில் ஜேர்மன் மொழியும் பேசத்தெரியாத நேரம் ஆங்கிலமும் ஜேர்மனும் கலந்தபடி பேசிக்கொண்டு வந்து தம்மை அறிமுகப்படுத்திய நாளிலிருந்தே அத்தம்பதிகளின் நட்பு எமக்கு மிகவும் மனமகிழ்வைத்தந்தது பற்றியும் நானிங்கு குறிப்பிடவேண்டும். சிறுவயதுக்குறும்புகள், இளமைக்காலம், கலாச்சாரம், அரசியல் என எத்தனையோவிடயங்கள் பற்றி ஓய்வுநேரத்தில் பேசத்தொடங்கினால் சிலமணிநேரங்கள் ஓடிவிடும். என்னதான் மொழி, கலாச்சாரம் வேறுபட்டாலும் பல மனித உணர்வுகள் பல ஒன்றுதானே! எனது கணவர் பொறுக்கமுடியாமல் மார்க்கைக் கூப்பிட்டார்."என்ன மார்க் ஏனிப்படி இருக்கிறீர்கள். சுகமில்லையா? ஓரு அசட்டுச்சிரிப்புத்தான் அவரிடமிருந்து பதிலாக வந்தது. "வேலைகிடைக்கவில்லை என்று கவலையா? என்று மீண்டும் கேட்க எதுவுமே பேசாமல் மார்க் எழும்பி எமது வீட்டிற்கு வந்தார். மெதுவாகத் தனக்குத்தானே பேசுவதுபோல "எனது மணவாழ்வின் ஆயுள் 10 வருடங்கள்தான்" என முணுமுணுத்தார்.

"என்னை விட்டுவிட்டு றெபேக்கா போகப்போகிறா... " சிலநொடிகள் தலையைக்குனிந்தபடி இருந்தார். பின்பு தொடர்ந்து. அவ தன்னுடன் வேலைசெய்யும் ஸ்டெபான் என்பவரைக் காதலிக்கிறா அவருடன் சென்று வாழவிரும்புகிறா" என்றவர் பொங்கிவரும் கண்ணீரை அடக்க மிகவும் முயற்சி செய்தார்.

நாங்கள் ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டோம். பின்பு எனது கணவர் மெதுவாகக்கேட்டார். "அப்படி முடிவே எடுத்துவிட்டாவா றெபேக்கா. நம்பவேமுடியவில்லையே!"

"ஆமாம் கடந்த சில தினங்களாக இதுபற்றி நானும் றெபேக்காவும் நிறையப் பேசிவிட்டோம். அவ தனது முடிவில் உறுதியாக இருக்கின்றா"

"எப்படி இந்த அதிர்ச்சியைத் தாங்கினீர்கள் மார்க்?"

"என்ன செய்வது எமக்கு விரும்பிய எத்தனையோ விடயங்கள் வாழ்வில் நடப்பதுபோல் விரும்பாதவையும் நடக்கின்றனவே. கசப்பானவையானாலும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்."

மார்க் புறப்பட்டுச் சென்ற பின்பும் எம்மைக் கவ்விய சோகத்தில் இருந்து அவ்வளவு சீக்கிரம் வெளிவர முடியவில்லை. மறுநாட்காலை கடையில் வைத்து றெபேக்காவைச் சந்திக்கவேண்டிவந்தது. சாதாரண சுகநலன்கள் விசாரித்த பின்னர் "இவ்வூரைவிட்டு நான் விரைவில் சென்று விடுவேன். மார்க் சொல்லியிருப்பாரே" என றெபேக்காவே விடயத்தை ஆரம்பித்தா "ம்..ம்.." என்று சொல்வதைத்தவிர வேறெதும் பேச எனக்கு வார்த்தைகள் வரவில்லை. ஏனோ றெபேக்காவின் முகத்திலும் சிறுவாட்டம் இருப்பது போலத்தான் எனக்குத் தோன்றியது.

பின்பு காரியங்கள் மளமளவென நடந்தன. அவர்கள் இருவருமே வழக்கறிஞரிடம், மற்றும் பல அலுவலகங்களிற்குத் தமது விவாகரத்துத் தொடர்பாகவும் சொத்துக்களைப் பிரிப்பது எனப் பலவிடயங்களாகப் போய்வந்து கொண்டிருந்தனர். சண்டை, கூச்சல் எதுவுமில்லாதது மட்டுமில்லாமல் இருவரும் காரில் ஒன்றாகப் போய்வருவதே எமக்கு வியப்பான விடயம்தானே. றெபேக்கா தான் வேலைசெய்யும் இடத்துக்குக்கிட்ட ஒரு அப்பாற்மன்ட் எடுத்திருப்பதாகவும் விரைவில் செல்லவிருப்பதாகவும் கூறினா. ஒருநாள் தனது பொருட்களுடன் அங்கு சென்றுவிட்டா. மார்க்கின்முகம் சோபையிழந்து காணப்பட்டாலும் மீண்டும் அவர் ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு தோட்டவேலைகளை ஆரம்பித்தார். பின்புவந்த வாரங்களில் காலையில் மார்க் எங்கோ புறப்பட்டுப்போவதும் மாலையில் வீட்டுக்கு வருவதையும், பல நாட்களாகப் பகல்வேளையில் அவர் வீட்டில் நிற்காததையும் நாம் அவதானித்தோம். தோட்டத்திலும் அவரைப்பார்க்க முடியவில்லை. எனது கணவர் என்னிடம் கூறினார் "மார்க்கிற்கு வேலை கிடைத்துவிட்டது போலிருக்கப்பா..ஏதோ கடவுள் அந்தாளை ஆகலும் சோதிக்காமல் இந்ததளவிலாவது ஒரு ஆறுதலைக்கொடுத்தாரே".

வாரஇறுதியில் மார்க் எம்மிடம் வந்தார். "புது வேலை எப்படிப்போகுது மார்க்?" "இதெங்கை அவ்வளவு சுலபமாகக் கிடைக்கிறது.....ஆ...நான் வீட்டிலை நிற்காததாலை புதிய வேலைக்கென நினைத்துவிட்டீர்களா?"

"ஆம்"

"இல்லை.நான் தினமும் றெபேக்கா வீட்டிற்குப்போகிறேன்."

"என்ன மார்க் சொல்லுகிறீர்கள்?"என ஆச்சரியத்துடன் கேட்டோம்.

"ஆமாம். அவர்கள் எடுத்த அப்பார்ட்மன்றில் பல வேலைகள் செய்யவேண்டியுள்ளன. அவர்கள் இருவராலும் இப்போது லீவு எடுக்க முடியாததால் நான்போய் அவற்றைச் செய்கிறன். நானும் இந்த வேலைகள் ஓரளவு நன்றாகச் செய்வன்தானே. இங்கும் நான் சும்மாதானே இருக்கிறன். இப்போ நன்றாகப் பொழுதுபோகிறது"எனச் சிரித்தபடி கூறினார்.

இப்படியும் ஒரு மனிதன் இருப்பானோ என்று நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு மெதுவாக நான் கேட்டேன்.
"எப்படி மார்க் உங்களால் இப்படிச் செய்யமுடிகிறது. உங்களை விட்டுவிட்டு இன்னொருவருடன் சென்ற உங்கள் மனைவிமேல் ஆத்திரமும் வெறுப்பும் கொப்பளிக்கவில்லையா?" "ஆரம்பத்தில் ஏற்பட்டதுதான். ஆனால் பின்பு றெபேக்காவின் மேலுள்ள வெறுப்புக் குறைந்துவிட்டது. அடிப்படையில் அவ ஒரு மிக நல்ல பெண். உயர்ந்த ரசனைகளும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர். என்னிலும் சிலபிழைகள் இருக்கின்றன. நடற்தது நடந்துவிட்டது. இனிநடக்கககூடியவற்றை நல்லதாக அமைப்போம்..."

"இந்த மனுசனுக்கு மண்டை பழுதாகிவிட்டது போலஇருக்கு. எந்தவிசரனாவது இப்படிப் போய்ச் செய்வானா?"

"இல்லை இந்தாள் ஒரு இளிச்சவாயனென்று றெபேக்காவிற்கு நல்லாவிளங்கியிட்டுது. ஓசியில இவரைச்சொல்லியே நல்லா வேலை வாங்கிறாள்."

இது நாங்கள் எங்களுக்குள் தமிழில்க் கதைத்துக்கொண்டது.
மனதிலுள்ளதைத்தான் முகம் பலநேரங்களில் காட்டிவிடுகிறதே! எங்களைப் பார்த்தவாறு மார்க் கூறினார். உங்களால் இதை ஜீரணிக்க முடிவில்லையா? யாரோ முகம் தெரியாதவர்களுக்கே நாம் எவ்வளவு உதவிகள் செய்கிறோம் .நாமும் பெறுகிறோம். என்னுடன் 10 வருடத்துக்கும்மேலாக சுகதுக்கங்களில் ஒன்றாக இணைந்திருந்த ஓர் பெண்ணிற்கு ஒரு சிநேகிதி என்ற வகையிலாவது இதைச்செய்யுறதுதானே மனிதாபிமானம்" என்றபடி அவர் தன்னிலுள்ள சில தவறுகளையும் மனம்திறந்து கூறினார்.

பின்பு ஆறுதலாக யோசித்தபோதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. கணவன் மனைவி உறவையும் தனிப்பட்ட நட்பையும் இவர்கள் ஒன்றாகக் கலப்பதில்லை. மனைவியாக இருந்து பிரிந்தவள் என்றாலும் அவள் எதிரி அல்ல. இப்போதும் ஒரு சிநேகிதிதான். எவ்வளவு உயர்ந்த மனப்பக்குவமிது. தம்மிலுள்ள பலவீனங்களை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதே ஒரு உயர்ந்த பண்புதானே.

இங்கு கணவன் மனைவி பிரிவது மிக அதிகமாக நிகழ்வது. அதனால் முக்கியமாகப் பாதிக்கப்படும் குழந்தைகள் மனநிலை பிற்காலத்தில் அவர்களைச் சமூகவிரோதச் செயல்களைச் செய்யத்தூண்டி பாரதூரமான விளைவுகள் இதனால் ஏற்படுவதை ஆராய்சிகள் விளக்குகின்றன. நானிங்கு றெபேக்கா செய்தது சரியென்றோ மற்றும் கணவன் மனைவியின் புரிந்துகொள்ளாமை பற்றியோ பேசவரவில்லை. மார்க் தனது மனைவிமேல் அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுக்களை அடுக்குவார் என எதிர்பார்த்த எமக்கு அவரின் அந்த உயரிய செயலிலுள்ள மனிதநேயமும், தான்நேசித்த பெண்ணிற்கு இன்றும் தனது உதவி தேவை என நினைத்து அதை முழுமனதுடன் செய்யும் அந்த விசாலமான மனப்பக்குவமும்தான் என்னை இவ்விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தூண்டியது.

அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - தமிழின் வெளியீடான புலம் சஞ்சிகையில் "முகத்தில் அறைவது குளிர் மட்டுந்தானா?" என்னும் தலைப்பில் கௌரி மகேஸ் அவர்களால் எழுதப்பட்ட சிறுகதை இது.

படைப்பு: கௌரி மகேஸ்

வேட்டியை மடிச்சுக் கட்டு

அம்பலத்தாருக்கு வாறபிரச்சனையளைக் கேட்டால் உங்களுக்குச் சிரிப்புத்தான் வருமெண்டு எனக்குத் தெரியும். வேட்டியிலையும் பிரச்சனை வருமெண்டு எவனுக்குச் சொன்னால் நம்புவான்?

இப்படித்தான் பாருங்கோ என்ர சின்னமச்சானுக்கு கொஞ்சநாளைக்கு முந்தி எங்கட நாட்டுப் புத்தகத்திலை visa அடிச்சுக் குடுத்துவிட்டாங்கள். தெரியும்தானே எங்கட ஆக்கள் உடனை என்ன செய்வினமெண்டு, பொடிப்பிள்ளையும் விட்டனோ பாரெண்டு இலங்கை, இந்தியா எண்டு ஒரு சுத்துச் சுத்திக்கொண்டு வந்தார். வந்தவன் பாவி சும்மா வந்தானே என்ர செல்லம்மாவுக்கு சீலை, சின்னவளுக்குச் சுடிதார் அது இது எண்டெல்லாம் கொணந்தான். எனக்கு ஒரு வேட்டியையும் கொணந்து தந்திட்டு அத்தார் நீங்கள்தானே கண்டவை நிண்டவையளுக்கெல்லாம் advice சொல்லிக்கொண்டு திரியுறனிங்கள். தலையுமெண்டால் நல்லா நரைச்சுக்கொண்டு போட்டுது இனி எங்கட சபைசந்தியளுக்குப் போகேக்கை உதைக்கட்டிக்கொண்டு போனியளெண்டால்தான் ஒரு பெரிய மனுசத் தோரணை வருமெண்டு சொல்லிப்போட்டுப் போட்டான்.

நானும் விலாசமா போன பொங்கல் விழாவுக்கு வேட்டியையும் கட்டிக்கொண்டு போனன். மண்டப வாசல்லையே தம் அடிச்சுக்கொண்டு நாலுபேரோட வம்பளந்துகொண்டு நிண்ட உவன் ராசுக்குட்டியன் என்னை மடக்கிப்பிடிச்சு

என்ன அம்பலத்தார் உந்தக்கோலத்திலை வாறியள்?....... வாற வழியிலை நாய் கீயொண்டும் கலைக்கேல்லையே ? எண்டான் நமட்டுச்சிரிப்போட.

எனக்குத்தெரியும் உவன் பொல்லாத குசும்பு பிடிச்சவன் இப்படி எதுவும் சொல்லுவானெண்டு, நானும் உவனை இண்டைக்கு எப்படியெண்டாலும் மடக்கோணுமெண்டு கணக்குப் போட்டுக்கொண்டு

ஏன் என்ன ராசுக்குட்டியர் நான் இப்ப என்ன அம்மணத்தோடையே வந்தனான்? உந்தச் சிரிப்பும் குசும்புக்கதையளும்தானே வேண்டாமெண்டுறது...... இல்லை அம்பலத்தார் உந்த வெள்ளையள் strassenban (போக்குவரத்துச்சாதனங்கள்) இல ஒருமாதிரியா பாத்திருக்குங்களல்லே... அதுதான் வெக்கமா கிடக்கு, அதுதான்.............

அட கதை இப்பிடிப்போகுதே..........

அப்ப என்ன உம்மட மனிசியும் ஜுன்ஸ், சேட்டோடையே வந்திருக்கிறா?

இல்லை, அது பாருங்கோ.........

பின்னை இப்ப பெண்டுகள்தான் வெக்கம் மானத்தையெல்லாம் விட்டிட்டினம் எண்டுறீரோ? அது சரி அப்ப உந்த வெள்ளையள் எங்கட நாட்டுக்கு ஊருலாப்புக்கு வரேக்க கோட்டு சூட்டோடயும், ஜுன்சோடையும் திரிய வெக்கமாக்கிடக்கெண்டு வேட்டி சட்டையும், சீலையும் கட்டிக்கொண்டே திரியுதுகள். நொண்டிச்சாட்டுக்கள் சொல்லுறதைவிட்டிட்டு மனுசிமாரைப் பாத்தெண்டாலும் நாலு நல்ல விசயங்களைப் பழகுங்கோ. கதைச்சுக் கொண்டு நிண்டு கடைசியிலை நிகழ்ச்சியைக் கோட்டைவிடப்போறம் நான் வாறன், எண்டு கதையை வெட்டிக்கொண்டு போட்டன். சும்மா சொல்லக்கூடாது நல்ல சாப்பாடும்போட்டாங்கள் அதை ஒருபிடிபிடிச்சிட்டு வெத்திலையையும் மெண்டுகொண்டு நிகழ்ச்சியளைப் பாப்பதெண்டு உக்காந்தால் பக்கத்திலையிருந்த கிட்டடியிலதான் கலியாணம் கட்டின பொடிப்பிள்ளை அப்பிடி இப்பிடி நாலு கதையளைக் கதைச்சுப்போட்டு

அண்ணை நீங்கள் வேட்டிசட்டையோடையே வந்தனிங்களோ இல்லாட்டில் இஞ்சைவந்துதான் மாத்தினனீயளே............

அட தம்பி உன்ரை மனுசி Toilet க்கை நிண்டே சீலைகட்டினவ?

இல்லையண்ணை schlafzimmer (படுக்கையறை) இலதான், எங்கட schlafzimmer பெரிசு நல்ல வசதியான வீடுதானே ஏன் கேட்டனிங்களண்ணை எண்டான் அந்தவிளாங்கா மடையன்.

இல்லையடா தம்பி உன்ரை அவ இங்கத்தைய ஆக்கள் சிரிப்பினமெண்டு இஞ்சை hall க்கு வந்துதான் சீலையை மாத்தினவவாக்குமெண்டு நினைச்சன். எண்டதும் என்னைப்பாத்து ஒருமாதிரி முறைச்சவன் அதுக்குப்பிறகு நிகழ்ச்சி முடியுமட்டும் என்னோட கதைகக்கவே இல்லை.

ஆனா பாருங்கோ நான் ஒருவிசயத்திலை M.G.R மாதிரி எனக்கும் தாய்க்குலங்களுக்கும் இடையிலை நல்ல வாரப்பாடு. எங்கையும் ஒரு விசேசத்துக்குப் போனனெண்டால்

தங்கச்சி உந்தச் சீலையை நீங்களே செலக்ற் பண்ணினனிங்கள் இண்டைக்கு வந்திருக்கிறவையள் கனபேர் உங்கட saree அந்தமாதிரி எடுப்பாயிருக்கெண்டு கதைச்சவை.

பிள்ளை உந்தச்சுடிதார் உமக்கு நல்லாபொருந்தியிருக்கு...

இந்தமாதிரி வந்திருக்கற தெரிஞ்ச பொம்பிளையளிலை பாதிப்பேருக்கெண்டாலும் சொல்லுறதுல கனபேருக்கு நல்ல சந்தோசம்.

அதோட அக்கா ஊரிலை இருக்கிற உங்கட தங்கச்சியின்ரை கலியாணப் பேச்சு எந்தளவிலை கிடக்குது?

ஊரிலையிருந்து கடிதங்கள் வருகுதோ, அப்பாவின்ரை சுகயீனம் எப்படி?

இந்தமாதிரியான குடும்ப கதையளையெல்லாம் அக்கறையோட கேக்கிறதிலயோ என்னவோ அவையளெல்லாம் என்னோட நல்லமாதிரி. அவையளெண்டால் அண்ணை நீங்கள் ஒராள்தான் சொல்லுறமாதிரிச் செய்யுறியள் மத்த ஆம்பிளையள்போல கலை, கலாச்சாரத்தைக் காப்பாத்தவேணுமெண்டு கதையளந்துபோட்டு கோட்டு சூட்டும், தண்ணிப்பாட்டியுமெண்டு திரியாமல் ஒழுங்கா இருக்கிறியள் எண்டு certificate தந்திட்டினம்.

எனக்கெண்டால் இப்பிடி நாலுபக்கக் கதையளையும் கேக்க என்னத்தைச் செய்யுறதெண்டு தெரியாமல் ஒரே குழப்பமாப் போச்சு.

விசயம் இப்பிடிக்கிடக்கப் போன கிழமை வீட்டுக்கு, வராதுவந்த மகராசனா சகலன் திடீரென வந்தார். வாசலிலேயே அவர் என்னடாவெண்டால்

அம்பலத்தார் உங்கட குடும்பமானத்தையே ஒரேயடியாக் கப்பலேத்திறதெண்டு முடிவெடுத்திட்டீரே காதிலை விழுகிற கதையளெண்டால் ஒண்டும் நல்லதாப்படேல்லை.

ஏன் என்னப்பா விசயம் நான்தானே ஒருவம்பு தும்புக்கும் போறதில்லை. சொல்லுறதெண்டால் விளக்கமாச் சொல்லும் எண்டன்.

உப்பிடித்தான் கொஞ்சக்காலத்துக்கு முந்தி உவர் சம்பந்தரும் கோயில் குளத்துக்கெண்டு கட்டத்தொடங்கின வேட்டியை சபை, சந்தி அது இது எண்டு எப்பபாத்தாலும் லூசுமாதிரி கட்டிக்கொண்டு திரிஞ்சு கடைசியிலை சபைசந்தியிலை ஒரு சனமும் மதிக்குதுகள் இல்லையெண்டு கனடாவுக்கு கம்பி நீட்டினவர். இப்ப அம்பலத்தார் தொடங்கியிருக்கிறார், உந்த ஆட்டம் எத்தனை நாளுக்கோ எண்டெல்லே சனங்கள் கதைக்குதுகள். ஒண்டுக்குள்ளை ஒண்டு சொல்லவேண்டிய கடமை சொல்லிப்போட்டன் விளங்கினால் சரிதான் எண்டுபோட்டு

செல்லம் .....உன்ர மனுசனிண்ட நடவடிக்கையளைக் கவனி எண்டுபோட்டுப் போட்டார்.

இந்தக்கதையளையெல்லாம் கேட்டதிலையிருந்து என்ரை மனுசி நானும் பாக்கிறன் வரவர உங்கட புத்தி ஏன் உப்பிடிக் குறுக்காலை போகுதெண்டு சதிராடினபடி!

எனக்கெண்டால் ஒரு வழியுமாப் புரியாமல் கடைசியிலை வெளி நாட்டிலை இருக்கிற எங்கட ஆம்பிளையள் தமிழ் கலை கலாச்சாரத்தைக் காப்பாத்துறதுக்கு என்ன என்ன செய்யலாம், என்னத்தையெல்லாம் செய்யக்கூடாதைண்டு ஒரு பஞ்சாயத்து வச்சு நல்ல முடிவாக் கெதியிலை சொல்லடா தம்பி எண்டு எங்கட I.B.C யின்ட பஞ்சாயத்துத் தலைவர் நந்தனுக்கு ஒரு கடுதாசி எழுதிப் போட்டிட்டு பாத்துக்கொண்டிருக்கிறன்.

பொன்.அம்பலத்தார